நெவர்... நான் ஏன் மன்னிப்புக் கேட்கணும்? குஷ்பு ஆவேசப் பேட்டி


நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது “மணிப்பூர் விவகாரத்திற்கு குரல் கொடுக்காமல் இதற்கு மட்டும் பேசுகிறீர்களே?” என திமுக நிர்வாகி ஒருவர் தரக்குறைவாக அவரை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்களைப் போல் என்னால் ’சேரி’ மொழியில் பேச முடியாது” என தெரிவித்தார்.

இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்த நிலையில், “ ‘சேரி’ என்பதற்கு பிரெஞ்சு மொழியில் `அன்புள்ள` என்றுதான் பொருள், அதைத்தான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டேன்” என குஷ்பு விளக்கம் அளித்தார். மேலும் `வேளச்சேரி`, `செம்மஞ்சேரி` போன்ற வார்த்தைகள் அரசு பதிவுகளிலேயே இருப்பதாகவும் தன்னுடைய பதிவுக்கு மன்னிப்புக் கேட்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி குஷ்புவுக்கு எதிராக மிக தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்தது. போராட்டம் சற்றே ஓய்ந்திருந்த நிலையில் இது தொடர்பாக குஷ்புவிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

குஷ்பு

என்னதான் காரணம் சொன்னாலும் ’சேரி’ என குறிப்பிட்டது தவறில்லையா?

உங்களுக்கு தவறாக தோன்றுகிறதா? என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தவறாகத் தெரியவில்லை. இதற்காக பல விளக்கங்களை நான் கொடுத்திருக்கிறேன். பெண்களை இழிவாகப் பேசும்போது வராத கோபம் இப்போது மட்டும் எங்கிருந்து வருகிறது. நான் தவறாக எதுவும் பதிவிடவில்லை. சேரி என்பதற்கு அன்பு என்றுதான் பொருள். அதைத்தான் நான் குறிப்பிட்டேன். சங்க இலக்கியங்களிலேயே சேரி என்ற வார்த்தை உள்ளது.

தமிழ் இலக்கியங்களில் கூட ’கூடி வாழும் இடம்’ என்றுதான் பொருள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம். என் கண்ணோட்டத்தை பொறுத்தவரை அந்த வார்த்தை தவறான வார்த்தை கிடையாது. பிரெஞ்சு மொழியில் அதற்கு அன்பு என்று தான் பொருள்.

குஷ்பு

வெவ்வேறு பொருள் இருந்தால் இடம் பொருள் ஏவல் உள்ளது அல்லவா? அப்படிப் பார்த்தால் நீங்கள் அந்த இடத்தில் பயன்படுத்தியது தவறுதானே?

கிடையாது. உங்களைப் போன்று அன்பு மொழியால் என்னால் பேச முடியாது என்றுதான் கூறினேன். இடம் பொருள் ஏவல் என்பது குஷ்புவுக்கு மட்டும்தானா... எதிரே பேசக் கூடியவர்களுக்கு கிடையாதா? ஒரு பெண் என்றும் பாராமல் எவ்வளவு ஆபாசமாக விமர்சனம் பண்றாங்க; கீழ்தரமாக பேசுகிறார்கள் அப்போதெல்லாம் உங்க இடம் பொருள் ஏவல் வராதா... அதுக்காக போராட்டம் நடத்தமாட்டீங்களா... கண்டிக்க மாட்டீங்களா? குஷ்பு தானே என வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் தானே. அதுபோலத்தான் இதுவும்.

இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என நினைத்தீர்களா?

நிச்சயம் கிடையாது. குஷ்பு எப்போ எதைப் பேசுவார் அதை பிரச்சினையாக்கி நாம பப்ளிசிட்டி ஆகிக்கலாம் என்றிருப்பவர்கள் இதனைப் பிரச்சினையாக்கி இருக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். அதனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துகொள்ளப் போவதில்லை.

குஷ்பு

காங்கிரஸார் மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்களே?

சிரிக்கிறார்... அட நீங்க வேற ஒரு வாரமா வருவாங்கன்னு வீட்லயே உக்காந்து இருந்தேன். வரவே இல்லை. இப்போ எதோ ஒரு 20 பேரை கூட்டிட்டு வந்து போராட்டம் பண்ணிட்டு போய் இருக்காங்க. நான் என்ன கேட்கிறேன்... குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவை தேர்ந்தெடுக்கும் பொழுது இதே காங்கிரஸ் தலைவர்கள் அவரை தீய சக்தி என்று சொன்னார்கள். “அவர் ராஷ்டிரபதி அல்ல... ராஷ்டிர பத்தினி” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சொன்னார். அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா?

ஒரு இடத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்து மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு போராட்டம் நடத்தினார்களா? நாங்குநேரியில் படிக்கிற பசங்களுக்குள் ஒரு பிரச்சினை நடந்தது. அப்பொழுது போராட்டம் நடத்தினார்களா? அங்கு போய் இவர்கள் பிரச்சினை பண்ணினார்களா? சில தினங்களுக்கு முன் இரண்டு பட்டியலின மக்களை பைக்கில் தூக்கிக்கொண்டுபோய் ராடால் அடித்திருக்கிறார்கள். அதற்கு ஏதாவது வருத்தம் தெரிவித்தார்களா? அங்கு போய் ஏதாவது மறியல் செய்தார்களா?

குஷ்புவுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டம்...

கடந்த ஓராண்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் 450 வழக்குகள் பதிவாகி இருக்கு. அந்த 450 சம்பவங்களுக்கு நான்கு தடவையாவது இவர்கள் எங்காவது போராட்டம் பண்ணாங்களா? இந்த மாதிரி கோஷம் போட்டார்களா? இல்ல... பொம்மை எரிச்சீங்களா? குஷ்பு வீட்டில் போராட்டம் வச்சா இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற காரணத்திற்காக இந்த மாதிரி செய்கிறார்கள். அவங்களுக்கு பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. என் சார்பாக அவங்களுக்கு வாழ்த்துகள் சொன்னேன்னு நீங்களே சொல்லிடுங்க.

இந்தப் போராட்டங்களைப் பார்த்து கோபம் வரவில்லையா?

சிரிப்புத்தான் வந்தது. திமுகவே அமைதியாக இருக்காங்க ஆனால், இவங்க குறை குடம் மாதிரி குதிச்சுட்டு இருக்காங்க. சாணி அடிக்கிறது, துடைப்பத்தால் அடிக்கிறது இதெல்லாம் பண்ண அவங்களுக்கே வெட்கம் இல்லை எனும் போது நான் ஏன் கோபப்படணும். தமிழ் நாட்டுல காங்கிரஸ்னு ஒரு கட்சி இருக்குன்னு மக்களுக்கு தெரியப்படுத்த இத ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கிறாங்க. குஷ்புவ தொட்டா பப்ளிசிட்டி கிடைக்கும்; அதனால்தான் இந்தப் போராட்டம்.

இந்த விஷயத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை குறித்து?

நிச்சயமாக அவர்களை நான் பாராட்ட வேண்டும்; அது என் கடமையும் கூட. கடந்த ஒரு வாரமாக என்னுடைய இல்லத்தின் முன்பாக பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்காங்க. ஆனால், நான் காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்கவில்லை. ஒருவரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டால் அங்கு போலீஸார் பாதுகாப்பு அளிப்பார்கள். இது வழக்கமான நடைமுறை தான். அதன்படி என் வீட்டில் பாதுகாப்பு போடப்பட்டது. இருந்தபோதிலும் அவர்களின் நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக, நன்றி சொல்கிறேன்.

‘சேரி’ விவகாரத்தில் உங்கள் கருத்தை திரும்பப் பெறமாட்டீர்களா?

நெவர்... நான் ஏன் மன்னிப்புக் கேட்கணும்... எதுக்காக எனது கருத்தை திரும்பப் பெற வேண்டும்? தப்புன்னா தயங்காம மன்னிப்புக் கேட்பேன். தப்பு இல்லைன்ன உயிரே போனாலும் மன்னிப்புக் கேட்கமாட்டேன். இந்த விவகாரத்தில் நான் தவறு செய்யவில்லை; தவறான அர்த்தத்தில் வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதற்கான விளக்கமும் கொடுத்துவிட்டேன். யாருக்கும் பயந்து பின் வாங்குவது நான் கிடையாது.

த்ரிஷா - மன்சூர் அலிகான்

த்ரிஷா விவகாரத்தை தொடர்ந்து நிறைய நடிகைகள் புகார் கூறி வருகிறார்களே..?

எந்தத் துறையில்தான் இது மாதிரி பிரச்சினைகள் இல்லை? எல்லாத் துறைகளிலும் இந்த பிரச்சினைகள் உள்ளது. சினிமா துறை என்பதால் அது அப்பட்டமாக வெளியே தெரிகிறது. இன்னொரு விஷயம்... ஒரு பிரச்சினை வந்தால் செயின் ரியாக்‌ஷன் மாதிரி வராங்க. அது மாதிரி இல்லாமல் பிரச்சினை நடந்த கையோடு புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.

மகளிர் ஆணையம் பாரப்பட்சமாக நடந்துகொள்கிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதே?

இப்படி ஒரு ஆணையம் இருக்கிறது என்பது குஷ்பு உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகுதான் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. உடனே நீங்க அதுக்கு ஏன் குரல் கொடுக்கல... இதுக்கு ஏன் குரல் கொடுக்கலன்னு வந்துடுறாங்க. நான் என்ன கேட்கிறேன்... மகளிர் ஆணையத்தின் சட்ட விதிகள் யாருக்காவது தெரியுமா? ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அதேசமயம் ஒரு சிலவற்றை அவரச வழக்காக நாங்கள் எடுக்க முடியும்.

த்ரிஷா மற்றும் ரோஜா விவகாரங்களில் ஆணையத்திடம் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக புகார் வந்தது. அதன் அடிப்படையில்தான் விளக்கம் கேட்கப்பட்டது. உடனே மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கல... மணிப்பூர் விவகாரத்தில் ஏன் குரல் கொடுக்கல?ன்னு தூக்கிட்டு வந்துடுவாங்க. மணிப்பூர் விவகாரத்தில் குற்றவாளிகளை தூக்கில் போடுங்கன்னு சொன்னவ குஷ்பு, பில்கிஸ் பானு விவகாரத்தில் சொந்தக் கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தேன். நல்லதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. எப்படா இடம் கிடைக்கும்... குஷ்புக்கு எதிராகப் போராட்டம் பண்ணலாம்ணு காத்துக்கிட்டு இருக்காங்க.

x