நந்தன்- திரை விமர்சனம்


சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் 'நந்தன்' படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ரிலீஸாகி இருக்கிறது.

வணங்கான்குடி ஊரில் பிரெசிடெண்ட் பதவிக்கான எலெக்‌ஷன் வருகிறது. வழக்கமாக, அந்த ஊரில் மேல்தட்டு சாதியை சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்கள். தலைவர் பதவியைத் தனக்கான மரியாதையாகவும் பார்க்கும் பாலாஜி சக்திவேல், தன்னை எதிர்த்து யாரும் தலைவராக வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அப்படியே யாராவது எதிர்த்து வந்தாலும் அவங்க கூட டீல் பேசுவது, அதற்கும் மீறி நடந்தால் கொலை என எந்த எல்லைக்கும் போகக் கூடிய சாதி வெறி, பதவி மோகம் கொண்டவராக இருக்கிறார்.

இந்த சமயத்தில் அந்த ஊரை ரிசர்வ்டாக அறிவிக்கிறார்கள். இதனால், அந்த ஊரில் சாதிய ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களில் இருந்து ஒருத்தர் தலைவராக வேண்டும் என்ற அறிவிப்பு வருகிறது. இதனால், ஆத்திரமடையும் பாலாஜி சக்திவேல் தன் சொல்பேச்சு கேட்டு அடிமையாக இருக்கும் கூழ்பானை என்கிற அம்பேத்குமாரை (சசிகுமார்) பிரெசிடெண்ட் ஆக்க முடிவு செய்கிறார். தன்னை பதவியில் கைப்பாவையாகதான் வைத்திருக்கிறார்கள் என்பதை சசிகுமார் உணரும்படியும் அவரது சுயமரியாதையை சீண்டி பார்க்கும் விதமாகவும் அவரைத் தனிப்பட்ட முறையில பாதிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கிறது. இதனால், பாதிக்கப்படும் சசிகுமார் இதை எதிர்க்கிறாரா? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ‘நந்தன்’ கதை.

எந்த நேரமும் வெத்தலை குதப்பும் வாய், தோள்பட்டை வரை வளர்ந்த முடி, அழுக்கு பனியன், 'அய்யா என்ன செஞ்சாலும் நல்லதுக்குதான்' என வெள்ளந்தியாக நம்பக்கூடிய குணம் என கூழ்பானை கதாபாத்திரத்தில் அவர் ஆரம்பத்தில் வரும் காட்சிகளில் மீட்டர் மாறாமல் நடித்துள்ளார். ஆனால், பிரசிடெண்ட்ட் ஆன பிறகு அவருடைய குணாதிசயம் மாறவில்லை என்றாலும் சில இடங்களில் கூழ்பானையையும் மீறி சசிகுமார் நமக்கு தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

சாதிய ஆணவத்த சுமந்து திரியும் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி போய் இருக்கிறார் இயக்குநர், நடிகர் பாலாஜி சக்திவேல். சசிகுமார் கதாபாத்திரத்தை காலி பண்ண அவர் செய்யும் சில விஷயங்கள், ஊர் மக்களை அரவணைக்கும்படி காட்டிவிட்டு, அவர்களை அடிமையாக வைத்திருப்பது, சொந்தக்காரர்களிடம் சாதி திமிர் காட்டுவது, அரசியல் சாணக்கியன் என சுற்றி இருப்பவர்கள் சொல்லும் போதெல்லாம் அவர் முகத்தில் தெரியும் மிடுக்கு என இந்த கேரக்டரை சிறப்பாக கையாண்டு உள்ளார். சசிகுமார் மனைவியாக வரும் செல்வி (பிக்பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி) நடிப்பில் இன்னும் போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. சமுத்திரக்கனிக்கு கிளைமாக்ஸில் வந்து போகக்கூடிய முருகன் எனும் பிடிஓ கதாபாத்திரம். அதை சிறப்பாக நடித்திருக்கிறார்.

சாதிய ரீதியா ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்துக்கு வந்தால் தங்களுடைய மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என நம்புகிறார்கள். ஆனால், அந்த அதிகாரத்துக்கு வர எதிர்கொள்ளும் அவமானங்கள், பதவிக்கு வந்த பிறகும் அவங்க நடத்தப்படும் விதம் இதெல்லாம் ‘நந்தன்’ படத்தில் அசலாக கொண்டு வர நினைத்த இயக்குநர் இரா. சரவணனுக்கு வாழ்த்துகள். இந்தக் கதையை சினிமாவாக்க கமர்ஷியலாக எந்த விஷயங்களையும் கொண்டு வராமலும், திடீரென கதாநாயகனை சூப்பர் ஹீரோ போல சித்தரிக்காமல் இருப்பதும் ஆறுதல்.

'ஆளறதுக்குதான் அதிகாரம் தேவைன்னு நினைச்சிட்டு இவ்வளவு நாள் ஒதுங்கியே இருந்தோம். ஆனா, இங்க வாழ்றதுக்கே அதிகாரம் தேவைப்படுது', ‘நீ அடிமையா இருந்தது மட்டுமில்லாம, அந்த பதவியையே அடிமையாக்கிட்ட’ இப்படி படம் முழுக்க வரும் வசனங்கள் ஷார்ப். வசனங்களில் காட்டிய இதே கவனத்தை திரைக்கதையிலும் கொண்டு வந்திருக்கலாம்.

அதிகாரமும் சாதியும் இவர்களை எந்த அளவுக்கு ஒடுக்குது, இதனால் அவங்க எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல காட்சிகளில் காட்டியிருந்தாலும் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. பல காட்சிகள் அடுத்து இதுதான் நடக்க இருக்கிறது என்பதையும் எளிதாக கணிக்க முடிகிறது. பல விஷயங்களை வலிந்து திணித்த உணர்வும் பார்வையாளர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

தன்னுடைய தாய் இறப்புக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, ஊர் முன்னால் தன்னை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது இந்த மாதிரியான விஷயங்கள் நடந்த பிறகு கூட சசிகுமார் கிட்டத்தட்ட அமைதியா அடங்கி போகும் மனநிலையில இருப்பது போலதான் காட்டுகிறார்கள். ஆனால், அதற்குப்பிறகு திடீரென சசிகுமார் தலைவர் பதவிக்கு போட்டியிட மனம் மாறுவது நம்பும்படியாக இல்லை.

ஜிப்ரானுடைய இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பாஸ் மார்க் வாங்குகிறது. ஆர்.வி. சரனுடைய ஒளிப்பதிவு அந்த ஊரின் இயல்பை திரையில் பிரதிபலிக்கிறது. ஆகமொத்தத்தில், 'நந்தன்' பலவீனமான திரைக்கதையால் தடுமாறுகிறது.

x