பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்


பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடனக் கலைஞர், வில்லி, கதாநாயகி, குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் சகுந்தலா. சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த இவர், 1960-ம் ஆண்டு வெளியான ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் நடனக் கலைஞராக அறிமுகமானார். ஜெய்சங்கர் ஜோடியாக ‘சிஐடி சங்கர்’ படத்தில் நடித்த பிறகு ‘சிஐடி சகுந்தலா' ஆனார்.

சிவாஜியின் ‘வசந்த மாளிகை’ படத்தில் ‘குடிமகனே’, ‘வைரநெஞ்சம்’ படத்தில் ‘நீராட நேரம் நல்ல நேரம்’, ‘நீதி’ படத்தில் ‘மாப்பிள்ளைய பாத்துக்கடி’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களில் இவர் நடனம் பாராட்டப்பட்டது. படிக்காத மேதை, ஒளிவிளக்கு, தவப்புதல்வன், பொன்னூஞ்சல், அன்பைத் தேடி, ரோஜாவின் ராஜா, வண்டிச்சக்கரம், தெய்வப்பிறவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1998-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி டி.வி.தொடர்களில் நடித்து வந்தார்.

பெங்களூரு யஸ்வந்த்பூரில் உள்ள மகள் செல்வி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் காலமானார். அவர் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. திரை பிரபலங்கள், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் இறுதிச் சடங்கு மல்லேஸ்வரத்தில் நடந்தது

x