கடந்த 2011-ல் வெளியாகி விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படம் ‘ஆரண்ய காண்டம்’. மிகத் தாமதமாகவே தமிழ் சினிமாவின் அபூர்வப் படைப்பு என்று ரசிகர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். இன்று அப்படத்துக்கு ‘கல்ட்’ ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது.
தமிழ் மீம்களில் அப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்ந்து கொண்டிருக்கிறன. தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப அப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தப் படத்தின் கதாநாயகி ஜாஸ்மின் பொன்னப்பா. அந்தப் படத்தில் ‘சுப்பு’ என்கிற பாலியல் ரீதியாக மிரட்டி ஒடுக்கப்படும் ஓர் இளம் பெண், இறுதியில் வெகுண்டெழுந்து தன் பாதையைத் தானே தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்தில் அட்டகாசம் செய்திருந்தார் யாஸ்மின் பொன்னப்பா.
அவரின் சிரிப்பையும் கண்களின் வழியான அவரது நடிப்பையும் தமிழ் ரசிகர்கள் இன்னமும் மறக்கவில்லை. அப்படிப்பட்டவர், பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மிஷ்கின், நடிகர், இயக்குநர் ஆர்.மாதவன் ஆகியோரின் உதவியாளரான பாலாஜி மாதவன் எழுதி, இயக்கியிருக்கும் ‘இடி மின்னல் காதல்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
வேறு எந்த மொழி சினிமாவிலும் இத்தனை ஆண்டுகளாக யாஸ்மின் நடிக்கவும் இல்லை. அவரிடம் பேச நிறையவே விஷயமிருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுப்பாகவும் அழகாகவும் தெளிவான தமிழில் பதில்களைச் சொன்னார். காமதேனு டிஜிட்டலுக்காக அவர் அளித்த அந்த பிரத்யேக நேர்காணலில் இருந்து...
நீங்கள் பிறந்தது, வளர்ந்தது படித்ததெல்லாம் எங்கே? மிகத் தெளிவாகத் தமிழ் பேசுகிறீர்களே..!
கர்நாடகத்தின் குடகில்தான் நான் பிறந்தேன். பெங்களூருவில் வளர்ந்தேன். ஏ.எம்.சி. கல்லூரியில் படித்தேன். எனக்கு 3 வயதாக இருந்தபோது அம்மா வேலைக்குச் செல்லும்போது வீட்டின் அருகில் இருந்த ஒரு பிளே ஸ்கூலில் விட்டுச் செல்வர். அதை நடத்தியவர் ஒரு தமிழ்ப் பெண்மணி. அவர்தான் எனக்குச் சிறு வயது முதல் தமிழ் சொல்லிக்கொடுத்தார்.
மாடலிங் வழியாக சினிமாவுக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், மாடலிங் துறைக்குள் வரும் எல்லோரும் சினிமாவில் பெயர் சம்பாதிப்பதில்லை. நடிப்புத் துறையில் எப்படி ஆர்வம் வந்தது?
பள்ளியில் படிக்கும்போது மாடலிங், சினிமா பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. அம்மா, அப்பா இருவரும் ஆசிரியர்கள். நான் கல்லூரியில் படிக்கும்போது என்னைப் பலரும் ‘ஓமக்குச்சி’ என்று கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு ஒல்லியாக இருப்பேன். என் ஒல்லியான தோற்றத்தைப் பார்த்த வரலாற்றுத் துறைத் தலைவர், ”நீ மாடலிங் துறையில் சிறந்து விளங்கலாம்” என்றார்.
அவர் என்னைப் பாராட்டுகிறார் என்றுதான் நினைத்தேன். அவர் சிறந்த புகைப்பட ஆர்வலர். அவர் தனது கேமராவில் என்னைச் சில படங்கள் எடுத்து அனிலா சிங் என்கிற மாடல் கோ-ஆர்டினேட்டருக்கு அனுப்பினார். அவர் வழியாக, இந்தியாவின் புகழ்பெற்ற ஃபேஷன் - விளம்பரப்பட ஒளிப்படக் கலைஞரான பிரபுதாஸ் டேஸ்குப்தா என்னைத் தேர்வு செய்தார்.
அதன்பிறகு நான் இந்தியா முழுமைக்கும் அறிந்த மாடல் ஆனேன். நிவியா, டிராபிகானா உள்ளிட்ட பல பிராண்டுகளில் தோன்றினேன். ஆனால், ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குள் வரும் வாய்ப்பு அமைந்தது வேறு கதை.
உங்களது நடிப்பு முறையில் இருக்கும் நேர்த்தியையும், நடிப்பைக் கட்டுப்படுத்தி அளவாக நடிப்பதையும் பார்க்கும்போது, ‘தியேட்டர் குரூப்’ ஒன்றிலிருந்து வந்தவரோ என எண்ணத் தோன்றும். உண்மையில் ஒரு காட்சி பல ஷாட்களாக, துண்டு துண்டாகப் படப்பிடிப்பு செய்யப்படும் சினிமாவுக்கு நடிப்பு உத்தி எதுவும் தேவை என்று உணர்ந்திருக்கிறீர்களா?
உங்கள் பாராட்டைத் தலை வணங்கி ஏற்கிறேன். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அதன் உணர்வை என்னுடைய உணர்வின் வழியாகத் தொட்டு வெளிப்படுத்துவதைத்தான் சினிமாவுக்கான நடிப்பாக வெளிப்படுத்துகிறோம். துண்டு துண்டாக ஒரு காட்சி எடுக்கப்பட்டாலும் அக்காட்சிக்கான உணர்வை ஒரு பயிற்சி பெற்ற நடிகராக ஒரே சீராக, விட்ட இடத்திலிருந்து தொடர முடியும்.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் தருணத்திலும் நமது எக்ஸ்பிரஸன்ஸ் தான் சொற்களற்ற மொழி. அதைக் கொண்டே நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் நம்மை புரிந்துகொள்கிறது. அப்படிப்பட்ட எக்ஸ்பிரஸன்களை மிகவும் நேர்மையாக ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக வெளிப்படுத்துவதுதான் நடிப்பு என்பேன்.
நடிப்புக்கான முன் அனுபவம் என்றால், கல்லூரியில் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், தியேட்டர் குரூப் அனுபவம் இல்லை. ஆனால், ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்காக குரு.சோமசுந்தரம் சார் கொடுத்த 10 நாள் பயிற்சிப் பட்டறையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
பொதுவாக ‘மாஸ்டர்கள்’ வித்தைகள் மொத்தத்தையும் கற்றுக்கொடுத்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், குரு.சோமசுந்தரம் இதற்கு நேர்மாறான ஆசிரியர். அவர் சொல்லித் தந்தது நிறைய. குறிப்பாக, கதாபாத்திரத்துக்கு உள்ளே புகுந்து வரும் உத்தியைக் கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு லெஜெண்ட்.
ஆஸ்கர் விருது வென்ற ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க, தேர்வு செய்யப்பட்ட 3 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் நீங்கள் இருந்தீர்கள் என்று அப்போது செய்திகள் வெளிவந்தன... அது உண்மைதானா?
ஆமாம்! இறுதிக்கட்டத் தேர்வை அந்தப் படத்தின் இயக்குநர் டேனி பாயல் சார் தான் நடத்தினார். அவர் என்னிடம், “குடிசைப் பகுதியில் போதிய உணவும் ஊட்டச்சத்தும் கிடைக்காமல் வளர்ந்த பெண்ணின் தோற்றத்துக்கு உனது உடல் தோற்றம் ஒத்துழைக்கிறது. ஆனால், முகம் செல்வச் செழிப்பான ஜூலியா ராபர்ட்ஸ் போல் இருக்கிறது. உன்னை இந்திய சினிமா கொண்டாடும் என்று நம்புகிறேன்” என்று வாழ்த்தினார். பின்னர் அந்தப் படத்திற்காக டேனி பாயலும் நம்முடைய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் ஆஸ்கரை வென்றபோது பெருமையாக இருந்தது.
‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உங்களை எப்படி, எங்கே கண்டுபிடித்தார்?
நான் அப்போது எலைட் இன்டர்நேஷனல் ஏஜென்ஸியின் ஒப்பந்தத்தில் மாடலாக இருந்தேன். அப்போது 20 வயது தான். சென்னையில் வரசித்தி பட்டுப்புடவை விளம்பரத்தில் நடித்திருந்தேன். அந்த விளம்பரத்தின் ஹோர்டிங்கில் எனது தோற்றம் - சிரிப்பு ஆகியவற்றைப் பார்த்த தியாகராஜன் குமாரராஜா, மாடல் கோ-ஆர்டினேட்டர் மூலம் எனது நம்பரை வாங்கிப் பேசினார்.
முதலில் அவரிடம் எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லை என்று மறுத்துவிட்டேன். ஆனால், அவர் ”நான் கூறும் கதையைக் கேட்டுவிட்டு முடிவு செய்யட்டும்” என்று மாடல் கோஆர்டினேட்டர் மூலம் திரும்பவும் வந்தார். எனக்கு என்ன பயமென்றால், கதையைக் கேட்ட பின், வேண்டாம் என்றால் மிகவும் அடாவடித்தனமாக இருக்கும் என்று தவிர்த்தேன். ஆனால் அவர். “நான் கதை சொன்ன பிறகு ’பிடிக்கவில்லை; வேண்டாம்’ என்று மறுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.
இப்படிச் சொல்பவரைத் தவிர்க்க முடியாமல்தான் போனில் கதையைக் கேட்டேன். அவர் முகத்தை நான் பார்க்காமலேயே குரல் வழியாகவே அவர் எனக்கு முழு திரைப்படத்தையும் எனது மனத்திரையில் ஓட்டிக்காட்டினார். ‘ஆரண்ய காண்ட’த்தின் சிங்கபெருமாள், சப்பை, காளையன், அவரது மகன் அந்தச் சின்னப் பையன் கொடுக்காபுளி, ஏன், நான் ஏற்ற சுப்புவாகவும் குரல்வழியாக மாறிக் காட்டினார். அவ்வளவு சிறந்த கதை சொல்லி அவர்!
தியாகராஜன் குமாரராஜாவுடன் இப்போதும் தோழமை தொடர்கிறதா?
மிக எளிமையான படைப்பாளி. அவரை அத்தனை எளிதாகத் தொடர்புகொண்டுவிட முடியாது. எங்காவது ஒரு ஜிப்சியைப் போலக் கண் காணாத இடத்தில் மக்களோடு மக்களாகத் திரிந்துகொண்டு இருப்பார். நான் சென்னைக்கு வரும்போது அவர் போனை எடுத்துப் பேசினால், அவரைச் சந்திக்காமல் போகமாட்டேன். அவ்வளவு சிறந்த சகோதரன், நண்பன்.
‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாடர்ன் லவ்ஸ்டோரி’யில் அவரது எபிசோட் பார்த்துவிட்டு அவரிடம் நீண்ட நெடிய நேரம் உரையாடியிருக்கிறேன். அவரைப் போன்றவர்கள் அபூர்வம். ஊடகங்களை விட்டு தூரமாக இருக்க விரும்புபவர். அவர் பேசமாட்டார், அவருடைய படைப்புகள் பேசுகின்றன. அவரை நாம் கொண்டாட வேண்டும். அதைச் செய்தோமா என்றால் சந்தேகம்தான்.
‘ஆரண்ய காண்டம்’ - ‘கல்கி’ படங்களுக்கு இடையில் 7 வருடங்கள் இடைவெளி. தற்போது நடித்துள்ள ‘இடி மின்னல் காதல்’ படத்துக்கு அடுத்த 7 வருடங்கள் இடைவெளி. இது நீங்களே வகுத்துக்கொண்ட இடைவெளியா?
சத்தியமாக இல்லை. ஆடியன்ஸின் பணம், அவர்களின் நேரம் இரண்டையும் வீணடிக்கக் கூடாது என்று நினைத்தேன். ‘ஆரண்ய காண்ட’த்துக்குப் பிறகு சினிமாவை மிகவும் நேசித்தேன். தமிழ், மலையாளத்திலிருந்து வரிசையாக படங்கள் வந்தன. சுமார் 10 படங்கள் இருக்கும். சளைக்காமல் கதைகள் கேட்டபோது அத்தனையும் என்னை ‘டைப் காஸ்ட்’ செய்பவையாக இருந்தன. அன்போடு மறுத்துவிட்டு மாடலிங்கை மட்டும் தொடர்ந்துகொண்டிருந்தேன்.
6 ஆண்டுகள் ஓடிவிட்டிருந்த நேரத்தில்தான் ‘கல்கி’ வந்தாள். வந்தாள் எனச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அந்தப் படத்தில் ‘கல்கி’, ‘ராதிகா’ என இரட்டை வேடம். இரண்டையும் வேறுபடுத்திக் காட்டி நடிக்க எனக்குச் சிறந்த களம் எனப் புரிந்தபோது அது எனது ஆடுகளம் என்று புரிந்தது. நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதில் கிஷோருடன் நடித்தது கூடுதல் சவால் அனுபவம்.
இப்போது பாலாஜி மாதவன் - ஜெயச்சந்தர் இருவரும் ‘இடி மின்னல் காதல்’ படத்தைப் பணம் போட்டு உருவாக்கியிருக்கிறார்கள். தங்கள் கதையின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் முதல் படத்தை இயக்குநரும் அவருடைய நண்பர்களுமே தயாரிக்கவும் விரும்புவார்கள். அப்படியொரு அழுத்தமான கதை.
நள்ளிரவில் நடக்கும் ஒரு சாலை விபத்து. அந்த விபத்தில் சிக்கியவர், விபத்தை ஏற்படுத்தியவர்கள் ஆகிய இரண்டு தரப்பிலும் இருப்பவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இதில் நான் அஞ்சலி என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். அஞ்சலி என்னைத் தமிழ் சினிமாவில் பிஸியாக்குவாள் என்று உறுதியாக நம்புகிறேன்.
யாஸ்மினின் இன்னொரு பக்கம்..?
நான் ஒரு யோகா ஆசிரியர். 4 வயதில் தொடங்கி அம்மாவின் அப்பா - தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர் இப்போது உயிருடன் இல்லை. ”உனக்கு லட்சியக் கனவுகள் இருக்கலாம். ஆனால், அதை அடைவதற்கு உன் உடலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். உடலின் ஆரோக்கியத்துக்கும் லட்சியங்களை வெல்வதற்கும் மிக அதிகமான தொடர்பிருக்கிறது” என்று சொல்லிக்கொடுத்தார். தினசரி 2 மணி நேரம் யோகாவுக்கு என்று ஒதுக்கிவிடுவேன். அதில் மூச்சுப் பயிற்சிக்கு மட்டும் 30 நிமிடம். இன்னொரு பக்கம் காளான் வளர்ப்புத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
‘இடி மின்னல் காதல்’ படத்துக்குப் பிறகு என்ன மாதிரியான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
சிறந்த ‘ரோம்காம்’ காதல் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். எல்லாருமே “நீங்கள் ரொம்ப சீரியஸான் நடிகரா?” என்று கேட்கிறார்கள். ஆனால், நான் ரொமாண்டிக்கான மனதுடையவள். காதல் கதைகளையும் அட்வன்சர் படங்களை அதிகம் நேசிக்கிறேன். அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் நான் யார் என்பதை என்னால் காட்ட முடியும்.