எம்.ஜி.ஆரின் ஒரே வில்லி: பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்!


பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா நேற்று பெங்களூருவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

’வசந்த மாளிகை’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சிஐடி சகுந்தலா. பெங்களூருவில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.

நடிகர் ஜெய்ஷங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால் அவருக்கு சிஐடி சகுந்தலா என்ற பெயர் நிலைத்தது. சினிமாவில் புகழ்பெற்ற சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரின் நடன நாடக குழுவில் நடிகை சகுந்தலாவும் நடமனாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்கள் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தனது திறமையால் கதாநாயகியாக அப்போது சிவாஜி, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். தனித்துவமான முகபாவனைகளளுக்கு புகழ்பெற்ற இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் தனது கவர்ச்சி நடனங்கள் மூலம் புகழ்பெற்றவர்.

‘இதயக்கனி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லியாக நடித்தார். அவருக்கு வில்லியாக நடித்த கதாநாயகி நான் தான் எனவும் பல பேட்டிகளில் இந்த விஷயத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.

‘நாடோடி மன்னன்’, ‘அரசக்கட்டளை’ உள்ளிட்டப் பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்து வந்தார்.

x