’வாழை2’ படத்தை நிச்சயம் எடுப்பேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘வாழை’. இதன் வெற்றி விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “’வாழை’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’வாழை’ படம் இந்த அளவுக்கு வரவேற்பு பெற எனது முந்தைய படங்களின் தயாரிப்பாளர்கள் கொடுத்த சுதந்திரமும் ஒரு காரணம். என் படங்களில் சண்டைக் காட்சிகள் பெரிதாக இருக்காது. வெளியீட்டுக்கு முன்பே ‘வாழை’ படம் பார்த்த பலரும் நிச்சயம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்று சொன்னார்கள். அதுபோலவே நடந்து விட்டது.
‘வாழை’ படத்தின் கிளைமாக்ஸில் ஏன் பூங்கொடி டீச்சர் வரவில்லை என்று கேட்கிறார்கள். உண்மையில், அவருடைய டேட் கிடைக்கவில்லை. கிளைமாக்ஸில் சிவனைந்தான் பூங்கொடி டீச்சர் மடியில் படுத்திருப்பான் என்று தான் படமாக்க நினைத்தேன். அப்படி இருந்திருந்தால் இப்போது வரும் மோசமான குற்றச்சாட்டுகளுக்கு அது பதிலாக இருந்திருக்கும். இந்தப் படத்தின் மூலமாக இஸ்லாமிய தோழர்கள் காப்பாத்தினாங்க என்ற உண்மையும் வெளியே வந்துள்ளது. அவர்களுக்கு நன்றி. என் பெற்றோருடனான உறவும் இப்போது இன்னும் வலுவாகி இருக்கிறது. நிச்சயமாக ‘வாழை2’ எடுப்பேன். இதற்கு பின்னால் இருக்கும் கதையை சிவனைந்தானை வைத்து எடுப்பேன்” என்று கூறினார்.