கார்த்தியின் புதிய படம் ‘மெய்யழகன்’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு 


சென்னை: கார்த்தி நடிக்கும் புதிய படமான ‘மெய்யழகன்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அரவிந்த் சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ஜப்பான்’ படத்துக்குப் பிறகு கார்த்தி இரண்டு படங்களில் நடிக்கிறார். ஒன்று, நலன்குமாரசாமி இயக்கும் படம். மற்றொன்று, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘96’ படத்தின் இயக்குநர் ப்ரேம்குமாரின் படம். தற்போது ப்ரேம்குமார் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் எப்படி?: இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அரவிந்த் சாமி சைக்கிள் ஓட்ட, பின்னாடி கேரியரில் கார்த்தி ஜாலியாக அமர்ந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் பின்னால் கோயில் ஒன்று வரையப்பட்டுள்ளது. போஸ்டரை பொறுத்தவரை அது பழமையான வடிவில் காட்சியளிக்கிறது. இந்த வித்தியாசமான போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

x