நான் மரணித்துவிடு என்று தொலைபேசியில் த்ரிஷாவிடம் சொன்னதை மன்னித்துவிடு என சொன்னதாக மக்கள் மாற்றிப் புரிந்து கொண்டனர் என மன்சூர் அலிகான் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த வாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியது சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயத்தில் நடிகர் மன்சூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தான் தவறு செய்யவில்லை எனவும், மன்னிப்பு கேட்க முடியாது எனவும் முரண்டு பிடித்து வந்த மன்சூர், காவல்துறை விசாரணைக்குப் பிறகு பொதுவில் நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதுமட்டுமல்லாது, நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதும் ‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வகுணம்’ என நடிகை த்ரிஷா மன்சூரின் மனிப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். இத்துடன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், மன்சூர் அலிகான் மீண்டும் புது சர்ச்சையை ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “த்ரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை. தொலைபேசியில் மரணித்துவிடு என்று சொன்னேன். அதைத்தான், மன்னித்துவிடு என மக்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.