பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஐகானிக் ஸ்டைல்: மறுஉருவாக்கம் செய்த வித்யாபாலன்!


மறைந்த பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை வித்யாபாலன் அவரது பாரம்பரிய பாணியை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.

’பாரத் ரத்னா’ விருது பெற்ற பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை வித்யாபாலன், அவரது பாணியை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியுடன் இணைந்திருக்கிறார் வித்யாபாலன். இந்த திட்டத்திற்கு ’ரீ-கிரியேஷன் ஆஃப் ஐகானிக் ஸ்டைல்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பகிர்ந்து கொண்ட நடிகை வித்யாபாலன், “நான் எம்.எஸ்.சுப்புலட்சுமியை பார்த்து தான் வளர்ந்தேன். என் அம்மா தினமும் காலையில் அவர் பாடிய சுப்ரபாதம் பாடலை வீட்டில் ஒலிக்க விடுவார். என்னுடைய தினம் அவரது குரலில் தான் தொடங்குகிறது. என்னைப் பொறுத்தவரை எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு ஆன்மிக அனுபவம். அவர் மீதான என் அன்பின் வெளிப்பாடுதான் இது. இந்த வழியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன்” என்றார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பேத்தி சிக்கில் மாலா சந்திரசேகரின் வழிகாட்டுதலுடன், அவரின் ஐகானிக் புடவைகள், அணிகலன்கள் மற்றும் ஒட்டுமொத்த அழகியலை மீண்டும் அனு மறு உருவாக்கம் செய்துள்ளார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இந்த ஐகானிக் புடவைகளை முத்து செட்டியார் மற்றும் நல்லி சின்னசாமி செட்டி ஆகியோர் உருவாக்கி கொடுத்துள்ளனர்.

இது குறித்து ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி கூறுகையில், "பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாணியை மீண்டும் உயிர்ப்பித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். வித்யாபாலன் இதற்கு சரியான தேர்வாக இருந்தார். இந்த அஞ்சலி இப்போதிருக்கும் தலைமுறைக்கு அவருடைய பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன்” என்றார்.

A post shared by Vidya Balan (@balanvidya)

x