‘கில்’ ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்?


‘கில்’ படத்தின் தென்னிந்திய ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் ஜூலை 5-ம் தேதி வெளியான படம் ‘கில்’. நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை மக்கள் கொண்டாடினார்கள். இந்தியாவில் வெளியாகும் முன்பு, பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 14-ம் தேதி அன்று ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 25-வது படம் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தெலுங்கில் ‘கில்லாடி’ படத்தினை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. கெனரு சத்ய நாராயணா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று படக்குழு தெரிவிக்கவில்லை. இந்தப் படம் இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘கில்’ படத்தின் ரீமேக்தான் என்று இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ராகவா லாரன்ஸே நாயகனாக நடிக்கவுள்ளார். இதனை வைத்து இணையத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த தகவல் குறித்து படக்குழுவினர் இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காத காரணத்தினால், இது உண்மையாக இருக்கும் என தெரிகிறது.

x