விஜயின் ‘தளபதி 69’ படம் அடுத்த வருடம் அக்டோபரில் ரிலீஸ்: வெளியானது அறிவிப்பு!


சென்னை: நடிகர் விஜயின் 69ஆவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் அரசியலில் தீவிர களம் காண இருப்பதால் தனது 69ஆவது படத்தில் இருந்து சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சினிமாவில் விஜய் இனி நடிக்க மாட்டார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நேற்று இதுபற்றி அறிவித்த படக்குழு, விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம், சோகம், விஜய் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு என ‘ஒன் லாஸ்ட் டைம்’ என்ற பெயரில் எமோஷனலான வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்கள். மேலும், ‘தளபதி 69’ படம் பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

அதன்படி, நீல நிறப் பின்னணியில் கையில் தீப்பந்தம் ஏந்தியிருக்கும்படியான ஓவியம் வடிவிலான போஸ்டரில் ’தளபதி 69’ படத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த போஸ்டரில் ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் விரைவில் வருகிறார் என்ற கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. நீல நிறப் பின்னணியில் பிள்ளையார் ஓவியமும் மறைமுகமாக இடம் பெற்றிருக்கிறது.

ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் விஜய் பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற சர்ச்சை கிளம்பியது. இதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த போஸ்டர் அமைந்திருக்கிறதா என ரசிகர்கள் டிகோட் செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, கடைசி படம் என்பதால் அரசியல் சார்ந்து கதைக்களம் இருக்கப் போகிறது என்பதையும் இந்த போஸ்டரும் கேப்ஷனும் தெளிவாகவே உணர்த்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வருடம் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த வருடம் அக்டோபர் மாதம் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு, ஹெச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசனின் 233ஆவது படம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு போஸ்டரில் கமல் கையில் தீப்பந்தத்துடன் நிற்க ‘ரைஸ் டூ ரூல்’ என்ற கேப்ஷன் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், பின்னர் இந்தப் படம் கைவிடப்பட்டது. ‘தளபதி 69’ பட அறிவிப்பு போஸ்டரிலும் இதே போன்று தீப்பந்தம் மற்றும் அரசியல் சார்ந்த கேப்ஷன் இருப்பதால் கமலின் கைவிடப்பட்ட கதைதான் ‘தளபதி 69’ என்ற தகவலும் இணையத்தில் உலா வருகிறது.

x