விஜய் பாட்டு பாடிதான் சிங்கர் ஆனேன்: ‘மனசிலாயோ’ பாடகி தீப்தி சுரேஷ்!


சென்னை: நடிகர் விஜயுடைய ‘மெல்லினமே’ பாடல் பாடிதான் பாடகி ஆனேன் என பாடகி தீப்தி சுரேஷ் ‘இந்து தமிழ் திசை’யுடனான நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

’கொடி பறக்குற காலம்’, ‘ஃபயர் சாங்க்’, ‘சுத்தமல்லே’ என சமீபத்தில் வெளியான பல ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர் பாடகி தீப்தி சுரேஷ். நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலையும் பாடியிருக்கிறார். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக நேர்காணல் செய்தோம். “’மனசிலாயோ’ பாடல் வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு ரஜினி சாரின் ‘லால் சலாம்’ படத்திலும் பாடல் பாடினேன். அதற்கடுத்து ‘வேட்டையன்’. அடுத்தடுத்து இதுபோன்று அமைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ‘மனசிலாயோ’ பாடலில் செம டான்ஸ் இருக்கு. நிச்சயம் திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் ஏஐ மூலம் கொண்டு வருகிறார்கள் என்பது எனக்கு முன்பே தெரியாது. பாடல் கேட்டபோதுதான் எனக்கே சொன்னார்கள். ஆச்சரியமான விஷயம். மறைந்த பல பாடகர்களுடைய குரலை ஏஐ மூலம் கொண்டு வருகிறார்கள் என்பது நல்ல விஷயம்தான். எந்த ஒரு புதுமுயற்சி வந்தாலும் அதற்கு நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அதுபோலதான் இந்த ஏஐ தொழில்நுட்பமும். நான் சின்ன வயதில் இருந்தே நடிகர் விஜய் ரசிகை. அவருடைய ‘மெல்லினமே...’ பாடல் பாடிதான் முதன் முதலாக ஒரு போட்டியில் பங்கேற்றேன். அதன் பிறகுதான் என் பாடும் ஆர்வத்தை அம்மா, அப்பா புரிந்து கொண்டார்கள். அதனால், விஜய் பாடல் பாடிதான் சிங்கர் ஆனேன் என சொல்லிக் கொள்ளலாம்” என்றார்.

x