தங்கை கதாபாத்திரத்தில் அறிமுகமானால் அதன்பிறகு கதாநாயகி வாய்ப்புத் தராமல் ஆட்டம் காட்டும் கோடம்பாக்கம். ஆனால், தனது இயல்பான நடிப்புத் திறன், ஈர்க்கும் அழகு ஆகியவற்றால் அதை மாற்றிக் காட்டி, மாஸ் ஹீரோ படங்களில் இடம் பிடித்தார் இந்துஜா ரவிச்சந்திரன்.
ஆர்யாவுடன் ‘மகாமுனி’, விஜயுடன் ‘பிகில்’, தனுஷுடன் ‘நானே வருவேன்’ என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக முன்னேறி வருகிறார் இந்துஜா. ரவிதேஜா படத்தின் மூலம் தெலுங்கிலும் கால் பதிக்கும் இவர், தற்போது ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘பார்க்கிங்’ படத்தில் நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாக விருக்கும் நிலையில் காமதேனு டிஜிட்டலுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது:
படங்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து நடிக்க என்ன காரணம்?
நான் அப்படி இருக்க நினைக்கவில்லை. ஆனால், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், யாருடைய ஆதரவும் இல்லாமல் முதல் தலைமுறைப் பெண்ணாக சினிமாவுக்குள் நுழைந்தவள் நான். சினிமாவில் எனது இடம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்றால் நான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களால் மறக்க முடியாத படங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தொடக்கம் வலிமையாக இருந்தால் தான் நீடித்து நிற்கமுடியும்; அது நீண்ட காலம் நமக்குக் கைகொடுக்கும் என்று ஒரு முடிவெடுத்தே படங்களை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தேன்.
கோவிட் லாக்டவுனுக்கு முன்பு ‘பிகில்’ வந்தது. அந்த நேரத்தில் ‘காக்கி’ ஷூட் செய்துகொண்டிருந்தோம். ‘நானே வருவேன்’ 2020-ல் ஒப்புக்கொண்டேன். ஆனால், கதை மாறிக்கொண்டே இருந்ததால், எனது கால்ஷீட் தேதிகளை மாற்றி மாற்றி கொடுக்கவேண்டிய சூழல் இருந்தது. அப்போது பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால். செல்வராகவன் - தனுஷ் காம்போ என்பதால் என்னால் நல்ல கதைகள் வந்தும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘நானே வருவேன்’ படத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்டதுதான் இப்போது ரிலீஸ் ஆகும் ‘பார்க்கிங்’.
இப்போது நீங்கள் பிரபலமான ஒரு நட்சத்திரம். ஒரு நல்ல படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரம் போதும் - அல்லது கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன்- இந்த இரண்டில் தற்போது எந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்?
‘மேயாத மான்’ படத்தில் ஒரு பெர்ஃபாமென்ஸ் ரோலில்தான் அறிமுகமானேன். ஆனால், இதுபோல் கேரக்டர் ரோல்களில் நடிக்கும்போது எனக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் என்பது குறைந்துவிடுகிறது. எல்லா ஆர்ட்டிஸ்டுக்குமே நமக்கு நிறைய ஸ்கிரீன் ஸ்பேஸ் ஒரு படத்தில் வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஏனென்றால், இரண்டரை மணிநேரப் படத்தில் நாம் எவ்வளவு நேரம் வருகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் ஆடியன்ஸை நாம் கவருவதற்கான வாய்ப்பு அமையும்.
அதனால், தற்போது முடிந்தவரை கேரக்டர் ரோல்களை தவிர்த்துவிட்டு, முழு நீள கதாநாயகி அல்லது முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்து வருகிறேன். வெவ்வேறு இயக்குநர்கள், வெவ்வேறு கதாநாயகர்கள், வெவ்வேறு கூட்டணி என்று முயற்சி செய்தால்தான் நாம் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். அதில் உறுதியாக இருக்கிறேன். அதேசமயம் நான் ரசிகர்களிடம் சென்றடையக் காரணமாக இருந்த கேரக்டர் ரோல்களை மதிக்கிறேன்.
‘பார்க்கிங்’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்கள்...
இப்போதெல்லாம் கதாநாயகி கதாபாத்திரங்களுக்கு நல்ல டெப்த் கொடுக்க வேண்டும் என்பதில் இயக்குநர்கள் கவனமுடன் இருக்கிறார்கள். ‘பார்க்கிங்’ படத்தில் ஹரீஷ் கல்யாணின் மனைவியாக நடித்திருக்கிறேன். ஆனால், முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்ணாக படம் முழுவதும் வருகிறேன். கருவில் குழந்தை வளர வளர அதற்காக ஓர் இளம் தாய் உணர்வுபூர்வமாக மகிழ்ச்சி அடைவாள் என்றாலும் உளவியல் ரீதியாக அது பலவீனத்தையும் கொண்டுவரும் காலம்.
அந்தக் கட்டத்தில் கணவன் வாங்கிய புதிய காரை நிறுத்த இடமில்லாமல் உருவாகும் ஒரு சின்ன பிரச்சினை மாநகரத்தில் எவ்வளவு பூதாகரமாக வெடிக்கிறது என்பதையும் அதனால் நான் எவ்வாறு பாதிக்கப்படுகிறேன் என்பதையும் ஆடியன்ஸின் பல்சை ஏற்றும் விதமாக எழுதியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.
‘மகாமுனி’, ‘நானே வருவேன்’ இப்போது ‘பார்க்கிங்’ அம்மாவாக நடிக்கும் துணிவு எப்படி வருகிறது?
ஆடியன்ஸ் கொடுக்கும் துணிவுதான். அவர்கள் ரொம்பவே ஆர்கானிக் ஆகவும் சென்ஸிபிள் ஆகவும் இருக்கிறார்கள். கதாநாயகி கேரக்டருக்கு குழந்தை இருந்தாலும் சரி, அவர் கர்ப்பமாக இருந்தாலும் சரி, கதையில் அவருக்கான முக்கியத்துவம் என்ன... அதை அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை மட்டும்தான் பார்க்கிறார்கள். அவர்களைக் கவரும் விதத்தில் நடித்துவிட்டால், கொண்டாடிவிடுவார்கள்.
நீங்கள் குறிப்பிட்ட முதலிரண்டு படங்களில் எனக்குக் கிடைத்த அதே ஆதரவு, ‘பார்க்கிங்’ கேரக்டருக்காகவும் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு நடிகர் என்றால் இதுதான் செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்று விடாப்பிடியாக இல்லாமல், ஒரு கதையைக் கேட்கும்போது இது ஆடியன்ஸுக்குப் பிடிக்கும் என உள்மனம் சொல்லிவிட்டால் அது எப்படிப்பட்ட ஹீரோயின் வேடமாக இருந்தாலும் நடிக்க ஆசைப்படுகிறேன்.
‘திரவம்’ இணைய தொடரில் நடித்த அனுபவம் எப்படி அமைந்தது? சினிமாவில் பிரபலமாகிவிட்ட பிறகு உங்களது நடிப்பு தாகத்துக்கு யூடியூபில் வடிகால் தேடுகிறீர்களே..?
எனக்கு எல்லா ஜானரும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை. ‘மேயாத மான்’ நடித்து முடித்த பிறகு ‘கம்பளிப் பூச்சி’ என்கிற குறும்படத்தில் நடித்தேன். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. யூடியூப் உலக அளவில் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கும் ஒரு சோஷியல் மீடியா. அதில் ஒரு விஷயம் ஆடியன்ஸுக்கு பிடித்துப் போய்விட்டால், நீங்கள் பான் இந்தியா என்பதையும் தாண்டி பான் வேல்டு ஆக கொண்டாடப்பட்டுவிடுவீர்கள். ‘லூசுப் பொண்ணு’ வீடியோ அப்படித்தான் டிரெண்ட் ஆனது. அந்தச் சமயத்தில்தான் தமிழில் வெப் சீரிஸ் வாய்ப்பு வந்தது. ‘திரவம்’ வெப் சீரிஸில் சகானா கேரக்டருக்கும் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிப்பது பற்றி..?
அறிமுகப்படமே அங்கே ரவிதேஜா சார் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. சிறந்த இயக்குநர், வெற்றிப் படங்கள் கொடுத்த நிறுவனம் என எல்லாம் சிறப்பாக அமைந்துவிட்டது. தெலுங்கில் முழுக்க முழுக்க கமர்ஷியல் சித்தரிப்புதான் இருக்கும். அதிலும் கூட அழகான கதாபாத்திரத்தை எனக்கு எழுதியிருக்கிறார் இயக்குநர். நடிப்பதற்கு எனக்கு நிறையவே களம் அமைந்துவிட்டது.