நடிகர் டொவினோ தாமஸின் ஐம்பதாவது படமாக ’ARM’ அதாவது ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ திரைப்படம் 2டி மற்றும் 3டி-யில் இந்த வாரம் வெளியாகி உள்ளது. தமிழிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நடிகர் டொவினோவுடன் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோஹினி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பல பேர் நடித்திருக்கிறார்கள். அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது.
கேரள கிராமம் ஒன்றில் ஸ்ரீபோதி விளக்கு என்ற விலை மதிக்க முடியாத, சக்தி வாய்ந்த தெய்வம் இருக்கிறது. இந்த தெய்வத்தை கோவிலுக்குள் சென்று தரிசிக்க அந்த ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படி மறுக்கப்பட்ட குடும்பங்களில் டொவினோ தாமஸின் (அஜயன்) குடும்பமும் ஒன்று.
அந்த ஊரில் எலக்ட்ரீஷியனாக அம்மா ரோகிணியுடன் அமைதியான மரியாதையான வாழ்க்கை வாழ விருப்பப்படுகிறார் டொவினோ. ஆனால், அவருடைய தாத்தா மணியன், தான் வாழ்ந்த காலத்தில் ஊரில் மிகப்பெரிய களவாணி. இதனால், டொவினோ நல்லவராக இருந்தாலும் அவர் மீதும் களவாணி என்ற முத்திரையையும் சந்தேகத்தையும் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் ஊர் மக்கள் சொல்லி கொண்டு வருகிரார்கள்.
இந்த ஊரின் பெரிய இடத்து பெண்ணான கீர்த்தி ஷெட்டிக்கும் டொவினோவுக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்த சூழ்நிலையில அந்த ஊரில் இருக்கும் ஸ்ரீபோதி விளக்கு திருடு போகிறது. அதை டொவினோ திருடியதாகச் சொல்லி சந்தர்ப்ப சூழ்நிலை அவருக்கு எதிராக திரும்புகிறது. உண்மையிலேயே, அந்த விளக்கு பின்னால் இருக்கும் கதை என்ன? அஜயன், மணியன் குடும்பத்துக்கும் அந்த விளக்குக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆக்ஷன் அட்வென்ச்சர் கதைதான் ’ARM’.
டொவினோவுக்கு கதைப்படி ட்ரிப்பிள் ஆக்ஷன். கேளு, மணியன், அஜயன் என்ற மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக, ஊரில் களவாணியாக வரும் மணியன் முரட்டுத்தனமான, யாருக்கும் பயப்படாத ஒரு கதாபாத்திரம். ஆனால், அவருடைய பேரனாக வரும் அஜயன் பயந்த, தயங்கி நிற்கும் கதாபாத்திரம். இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்குமான வித்தியாசத்தை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் திரையில் அடுத்தடுத்து வரும் போதும் வித்தியாசப்படுத்தி அந்தந்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார்.
நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி, கீர்த்தி ஷெட்டி, ரோகிணி. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை. சுரபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. மற்றபடி ரோகிணி, கீர்த்தி ஷெட்டி இருவரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்கள். டொவினோவின் நண்பனாக வரும் ஜோசப் கதாபாத்திரம், கொல்லனாக வருபவர் கதாபாத்திரத்தை இன்னுமே சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். அதேபோல வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன் கதாபாத்திரம் வலுவில்லாமல் இருக்கிறது.
படத்தின் பெரிய பலம் அதன் தொழில்நுட்பக் குழு. மூன்று விதமான காலக்கட்டத்தில் இந்தப் படம் நடக்கிறது எனும் போது அதற்கேற்ற உடை, ஒப்பனை, கலை இயக்கம், ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக வந்துள்ளது. திபு நினன் தாமஸூடைய இசை சில இடங்களில் அதிகமாக தோன்றினாலும் பல காட்சிகளை இவரது இசை தூக்கி நிறுத்துகிறது.
உண்மையான ஸ்ரீபோதி விளக்கை மணியன் தேடிப்போகும் பரபர காட்சிகள், ஆக்ஷன் கொரியோகிராபி, இரண்டாம் பாதியில் கட்டிப்போடும் கதை, டொவினோவுடைய நடிப்பு இதெல்லாம் படத்தின் ப்ளஸ். சாதிய ஏற்றத்தாழ்வு, பிறப்பின் அடிப்படையில ஒருவரை எடை போடக் கூடாது போன்ற விஷயங்களை பேச முயற்சித்திருக்கும் இயக்குநர் ஜிதின் லால், திரைக்கதாசிரியர் சுஜித் நம்பியாருக்கு வாழ்த்துகள். ஆனால், இந்த விஷயங்களை அழுத்தமாக இல்லாமல் நீர்த்துப் போவது மைனஸ்.
கதையின் முக்கிய கட்டத்திற்கு நகரவே நேரம் எடுக்கும் முதல் பாதி, மணியன் வீரதீரன், கள்வன் என்பதைத் தாண்டி அவர் பக்கம் நியாயம் சேர்க்கும் காரணங்கள் எதுவும் இல்லை. இந்த வருடத்தின் முதல் பாதியில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘உள்ளொழுக்கு’, ‘பிரேமலு’ போன்ற யதார்த்தமான ஒன்லைன் கொண்ட மலையாளப் படங்கள் ஹிட் ஆனது. இதைத் தாண்டி நம்ம ஊர் ஸ்டைலில் ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் கதையை மலையாளத்தில் பார்க்க வேண்டும் என விரும்புவர்கள் திரையரங்கில் 'ARM' படத்தைப் பார்க்கலாம்.