இவருக்கு ஏன் இத்தனை மவுசு..?


ஸ்ரீலீலா

பான் இந்திய சினிமாக்கள் அதிகமாக வரத் தொடங்கிய பிறகு, 5 மொழிகளுக்கும் சேர்த்து குறைந்தபட்சம் 1 கோடி வரை ஊதியம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள் இளம் ஹீரோயின்கள். அப்படி, தென்னிந்திய மாஸ் ஹீரோ படங்களில் நடிக்கும் வளரும் கதாநாயகிகள் பட்டியலில் மொழிகளைக் கடந்து ரசிகர்களின் வசீகரமாக மாறியிருக்கிறார் ஸ்ரீலீலா.

விரைவில் தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘ஸ்கந்தா’ என்கிற படத்தில் ஸ்ரீலீலாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் 1 கோடி ரூபாய். மாஸ் ஹீரோக்களின் ‘வசூல் கிளப்’ மதிப்பைப் பொறுத்து, அவர்களுக்கு கருப்பாகவும் வெள்ளையாகவும் அள்ளிக்கொடுக்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஒரு கோடி ரூபாய் என்பது அடிமாட்டுச் சம்பளம் தான்.

ஆனால், இந்த ஒருகோடியும் கூட குறைந்தது 5 வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் வளரும் கதாநாயகிகளுக்குத்தான் தெலுங்கு சினிமாவுலகில் தரப்படுகிறது. ஆனால் ஸ்ரீலீலா தனது அழகு, திறமை ஆகியவற்றால் அந்த லிமிட்டைத் தகர்த்து முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீலீலா அறிமுகமான ‘கிஸ்’ (கன்னடம் 2019) படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதே தென்னிந்திய சினிமாவில் பெரும் அலையை உருவாக்கினார். அந்த அலை தற்போது கோலிவுட் வரை வந்து சலசலப்பதுடன் முன்னணி ஹீரோக்களின் தேர்வாகவும் அவர் மாறி வருகிறார். சீக்கிரமே இவர், விஜய், தனுஷ், சிம்பு ஆகியோரின் படங்களுக்கு தேர்வு செய்யப்படலாம் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

அப்படியென்ன ஸ்ரீலீலாவிடம் மாயம் இருக்கிறது?மறைந்த திவ்யா பாரதி, ஸ்ரீதேவி, தற்போதைய ராஷ்மிகா, பூஜா ஹெக்டே என 80-கள் மற்றும் இந்நாளின் கனவுக் கன்னிகளின் தேர்ந்த கலவையாக அமைந்த தோற்றம்தான் ஸ்ரீலீலாவின் ப்ளஸ்.

22 வயதான ஸ்ரீலீலா அம்மாவைப் போலவே தானும் ஒரு டாக்டர். அமெரிக்காவில் குடியேறிய தெலுங்கு குடும்பத்தில் பிறந்த பெண் இவர். 3 வயதில் குடும்பம் பெங்களூருவில் குடியேறியது. தெலுங்கு தாய்மொழி என்றாலும் மகள் கன்னடத்தைக் கற்றுக்கொள்ளட்டும் என இரண்டாம் மொழியாக பள்ளியில் அதைப் பயில வைத்தார் அவரது அம்மா டாக்டர் ஸ்வர்ணலதா.

பெங்களூருவில் பிரபலமான மகளிர் மருத்துவ நிபுணராக இருக்கிறார் ஸ்வர்ணலதா. ஸ்ரீலீலாவின் அப்பா சூரபனேனி சுபாகர ராவ் பெங்களூருவிலிருந்து ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் இருக்கிறார். மகளையும் மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீலீலாவையும் மருத்துவம் படிக்க வைத்தனர். படிப்பு முடித்து மகளும் இப்போது மருத்துவராகிவிட்டார்.

தனது அம்மாவுடன் ஸ்ரீலீலா...

ஸ்ரீலீலா தனது 6 வயதில் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்று அரங்கேற்றமும் செய்தார். தொடக்கத்தில் இன்ஸ்டாவில் தனது பரதநாட்டியப் படங்களைப் பதிவேற்றிவிட்டு லைக்குகளை எண்ணிக் கொண்டிருந்தார். அந்தப் படங்களை இன்ஸ்டாவில் பார்த்த கன்னட இயக்குநர் ஏ.பி. அர்ஜுன், தனது ‘கிஸ்’ படத்தில் ஸ்ரீலீலாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அறிமுகப்படமே சூப்பர் ஹிட் ஆனதுடன் சிறந்த புதுமுகக் கதாநாயகிக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றார் ஸ்ரீலீலா. அப்புறமென்ன... கன்னடத்தில் அவர் இரண்டாவதாக, ஸ்ரீமுரளிக்கு ஜோடியாக ‘பாரதே’ என்கிற படத்தில் நடித்தார். அதைப் பார்த்துவிட்டு தெலுங்கு திரையுலகமும் ஸ்ரீலீலாவை திரும்பிப் பார்த்தது. இவரது தாய்மொழி தெலுங்கும் என்று தெரிந்த பிறகு முன்னணி மாஸ் ஹீரோவான ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க மூன்றாவது படத்திலேயே அழைக்கப்பட்டார் ஸ்ரீலீலா.

வெங்கி குடுமுலாவின் இயக்கத்தில் தெலுங்கு மாஸ் ஹீரோ நித்தின் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு கால்ஷீட் பிரச்சினை. அந்த இடத்தை ஸ்ரீலீலா சரியாக பூர்த்தி செய்தார். இந்தத் தொடக்கம் அவரை டோலிவுட்டில் தற்போது ஹாட் ஹீரோயின் ஆக்கியிருக்கிறது.

நந்தமூரி பாலகிருஷ்ணா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், விஜய் தேவரகொண்டா ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் ஸ்ரீலீலாவின் வேகத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதனால் தான் தற்போது ஸ்ரீலீலாவுக்கு 1 கோடி ரூபாய் ஊதியம்!

தற்போது ஸ்ரீலீலாவை சமூக ஊடகங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியன் பேர். எந்த அறிமுகக் கதாநாயகியின் மீதும் ரசிகர்கள் இத்தனை பைத்தியமாக அலைந்ததில்லை. ஸ்ரீலீலா தமிழ் ரசிகர்களை ‘ஸ்கந்தா’ படத்தின் வழியே சந்திக்க வருகிறார்.

இங்கே என்ன மாயம் செய்கிறார் என்று பார்க்கலாம்!

x