ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர்; பெண்களை நீக்கினால் பாலியல் பழியா? - இயக்குநர் சீனு ராமசாமி ஆதங்கம்!


’’விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பிலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார்.? ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர். அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா?’’ என நடிகை மனிஷாவுக்கும், பத்திரிகையாளர் பிஸ்மிக்கும் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்திரிகையாளர் பிஸ்மி

சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய பத்திரிகையாளர் பிஸ்மி, இயக்குநர் சீனு ராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பில் நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் அவரைத் தரக்குறைவாக நடத்தியதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ” ’ஒரு குப்பை கதை’ ஆடியோ விழாவில் எனக்கு மனிஷா நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க” என பதில் போட்டார்.

மனிஷா

இது இணையவெளியில் விவாதத்தை ஏற்படுத்த நடிகை மனிஷா இதற்கு விளக்கம் கொடுத்தார். '’ ‘ஒரு குப்பை கதை’ பட இசை வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி மேடையில் அமர்ந்திருந்ததால் தான் எல்லாருக்கும் சொன்னது போல் அவருக்கும் நன்றி சொன்னேன். எதையும் மாற்ற முடியாது. 9 வருஷத்துக்கு முன்னாடி என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டவரிடம் நான் ஏன் மீண்டும் பணியாற்ற போகிறேன். உண்மை எதுவோ அதை சரியாகப் பேசுங்கள்” எனப் பதிவிட்டார்

இயக்குநர் சீனு ராமசாமி

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் நீண்டநெடிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதில், ‘’இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா. படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்? விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பிலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ? என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?’’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதேபோல, ’’அண்ணன் பிஸ்மி ஒவ்வொரு நாள் தன் பேச்சை எனக்கு அனுப்புவார். ஒரு பூ வாட்ஸ்அப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது, மாமனிதன் உலகம் போற்றிய ஒரு சினிமா. அதனால் உங்களை ஒருமையில் எழுதிவிட்டேன். ஏன் கடந்த ஒன்றரை வருடமாக என்னை டார்க்கெட் செய்து வலை பேச்சில் 20 வீடியோ பேசினீர்கள் பிஸ்மி அண்ணா?’’ என கூறியுள்ளார்.

x