சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெற்று வந்த ’கங்குவா’ படப்பிடிப்பில், ரோப் கேமரா திடீரென அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யாவுக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. சூர்யா நடிப்பில் புதிய படங்கள் ரிலீசாகி நீண்ட காலம் ஆகி விட்டதால், கங்குவா வெளியீட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சண்டை காட்சி படப்பிடிப்பில் நடிகர் சூர்யா பங்கேற்று நடித்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேலேயிருந்த ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதை கவனித்த படப்பிடிப்பு குழுவினரும், சக சண்டைக் கலைஞர்களும் அதிர்ச்சியில் கத்தியதையடுத்து, சமயோசிதமாக நடிகர் சூர்யா அங்கிருந்து உடனே விலகினார். இதனால் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார். எனினும், கேமிரா தோளின் மீது உரசியபடியே விழுந்ததில், நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டடதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நசரத்பேட்டை போலீஸார், படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...