ஹேமா கமிட்டி அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்


மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி வெளியிட்ட அறிக்கை, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிக்கை வெளியான பின், பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது சில நடிகைகள் புகார்களைக் கூறியுள்ளனர். இந்தப் புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான வழக்குகளை கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, விசாரணைக்கு நேற்று வந்தது.

அப்போது கேரள அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள் கூறியதாவது: ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 4 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? பெரும்பான்மையான பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. இந்த வழக்கில் புகார் அளித்தவர் வழக்கை தொடர விரும்பவில்லை என்றால் அதை மதிக்க வேண்டும்.

அறிக்கையின் ரகசியத்தன்மை பேணப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வு குழுவிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் உட்பட விசாரிக்கும் விஷயங்கள் குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது. ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை சீலிட்ட கவரில் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகள், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தக்கூடாது. அமைப்புசாரா தொழில்களில் பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கேரள அரசு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

x