நடிகர் ஜெய்ஷங்கர் இறப்புக்கு வராத ரஜினிகாந்த்: நினைவுகள் பகிரும் மகன் சஞ்சய் ஷங்கர்!


சென்னை: பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகன் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் ஷங்கர். நடிகர்கள் சிவாஜி கணேசன் - எம்.ஜி.ஆர். என்ற இருபெரும் துருவங்கள் கோலோச்சிய சமயத்தில் சினிமாத்துறைக்குள் நுழைந்த ஜெய்ஷங்கர், ‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ என்ற பட்டம் பெற்றார்.

இதுகுறித்து சஞ்சய் ஷங்கர் அளித்த விரிவான நேர்காணலை முன்பு இந்து தமிழ் திசை யூடியூப் தளத்தில் பார்த்தோம். சினிமாவில் கதாநாயகனாக முதல் இன்னிங்க்ஸை முடித்த ஜெய்ஷங்கர் இடைப்பட்ட காலத்தில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஜொலித்தார். அவர் அந்த முடிவு எடுக்க என்ன காரணம், அவரது குடும்ப வாழ்க்கை, திரைத்துறையில் அவருடன் நடித்த கதாநாயகிகள் ஆகியவை குறித்த நினைவுகளை ’இந்து தமிழ் திசை’ யூடியூப் தளத்தில் பகிர்ந்து கொள்கிறார் சஞ்சய் ஷங்கர்.

அவர் பேசியிருப்பதாவது, “கதாநாயகனாக பல நூறு படங்கள் நடித்தாயிற்று. இனிமேல், என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் ‘முரட்டுக்காளை’ பட வாய்ப்பு வந்தது. இந்த கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் சாரும் பரிசீலனையில் இருந்தார். அப்பாவிடம் வந்து கேட்க ஏவிஎம் தரப்பில் தயங்கினார்கள். ’இருந்தாலும் கேட்டுப் பார்ப்போம்’ என ஏவிஎம் சரவணன் சார் அப்பாவிடம் கேட்டார்கள். யோசித்துப் பார்த்துவிட்டு, அந்த வாய்ப்பை அப்பா ஒத்துக் கொண்டார். இந்த செய்தி ரஜினி சாருக்கு போனதும் எனக்கு சரிசமமாக அவருடைய கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என ரஜினி சார் வலியுறுத்தினார். அதுபோலவே கதையும் அமைந்தது.

அதன் பிறகு பல வில்லன் கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் நடித்தார். அப்பாவுடன் ரஜினி-கமல் இருவரும் நல்ல நட்பில் இருந்தனர். இருந்தாலும் ரஜினி சார் அப்பாவுக்கு இன்னும் நெருக்கம். ‘அப்பாவின் இறப்புக்கு ரஜினி சார் ஏன் வரவில்லை?’ எனப் பலரும் கேட்டார்கள். ’அப்பாவை மிகவும் உற்சாகமாகப் பாத்துவிட்டு அசைவில்லாத உடம்பைப் பார்க்க விரும்பவில்லை’ என்று ரஜினி சார் தெளிவுப்படுத்தியிருந்தார்” என்றார்.

மேலும், “அப்பாவின் பாடல்களைப் போலவே கதாநாயகிகளும் அப்போது பேசப்பட்டார்கள். கே.ஆர். விஜயா, ஜெயலலிதா, லட்சுமி, ஜெய்சித்ரா ஆகியோர் அப்பாவுடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி தராதவர் என்று பெயர் எடுத்தவர் அப்பா. குடும்பத்தோடு அடிக்கடி வெளியே போக விரும்புவார். நாங்கள் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று விரும்பினார். நாங்கள் சினிமாவுக்கு வர வேண்டாம் என்று எப்போதுமே சொல்வார். அப்பாவுக்கு தயிர் சாதம் சாப்பிட மிகவும் பிடிக்கும். விதவிதமான கார்களும் அவற்றைத் தானே ஓட்டிச் செல்வதும் அவருக்கு பிடிக்கும்” என்றார்.

x