நடிகர் விஜயைப் பார்க்க 6 மணி நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளி சிறுவன்!


நடிகர் விஜயின் பாட்டை கேட்டவுடன் உற்சாகத்தில் மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் துள்ளி குதித்திருக்கிறான்.

’GOAT' படத்திற்காக நடிகர் விஜய் திருவனந்தபுரம் சென்ற போது அங்கே ரிஷான் என்ற மாற்றுத்திறனாளி குழந்தையை சந்தித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் விஜயை பார்த்த பிறகு அந்தக் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் இருப்பதாக சொல்லி, அந்த சிறுவனுடைய குடும்பத்தினர் சென்னையில் மீண்டும் விஜயை சந்திக்க வந்திருக்கிறார்கள். சுமார் ஆறு மணி நேரம் விஜய் வருவார், தன் குழந்தையைப் பார்ப்பார் என விஜய்யு வீட்டு வாசலில் அந்த சிறுவனுடன் காத்திருந்திருக்கிறார்கள்.

இதுபற்றி அந்த சிறுவனுடைய பெற்றோர் பகிர்ந்து கொள்ளும் போது, பல லட்சம் செலவு செய்தும் தங்கள் குழந்தைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் நடிகர் விஜய் சந்தித்த பின்பு தான், தங்களுடைய மகன் சுறுசுறுப்பாகவும் நடவடிக்கையில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இதனால், மீண்டும் ஒருமுறை தங்களுடைய மகனை விஜய் சந்தித்தால் அவன் கொஞ்சமாவது குணமடைவான் என நம்புவதாகவும் கூறினர்.

ஆறு மணி நேர காத்திருப்புக்கு பின்பு, நீலாங்கரை வீட்டிற்கு வந்த நடிகர் விஜய்யின் காரை பார்த்ததும் அந்த சிறுவன் துள்ளி குதித்து ஓட முயன்றது அப்பகுதியில் இருந்த அனைவரையும் வியப்புக்குள் ஆக்கியது. அதுமட்டுமின்றி விஜய்யின் பாடலை இசைக்க அச்சிறுவன் இருக்கும் சேரில் இருந்து எழுந்து ஆடத் துடிப்பதும் பார்ப்போர் கண்களை கலங்க செய்தது. ஆனால் நடிகர் விஜய்யோ தன் காரை ஒரு நிமிடம் கூட நிறுத்தாமல் அவரது வீட்டுக்குள் சென்றது வருத்தமளிப்பதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.

x