67 வயதில் பத்தாம் வகுப்பில் சேர்ந்த கேரள நடிகர்! உருக்கமான தகவல்


விண்ணப்பத்தை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கும் நடிகர் இந்திரன்ஸ்

தேசிய மற்றும் மாநில திரைப்பட விருது வென்ற மலையாள நடிகர் இந்திரன்ஸ், தனது 67வது வயதில், கேரள மாநில எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 10ம் வகுப்புக்கு இணையாக அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்திட்டத்தில் இணைந்துள்ளார்.

கேரள நடிகர் இந்திரன்ஸ்

கேரள மாநில அரசின் எழுத்தறிவுத் திட்ட விளம்பர தூதுவராக இந்திரன்ஸ் செயல்பட உள்ள நிலையில் அவர் தனது கல்வித்திட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அதே சமயம் இதற்கு முன்னர், இந்திரன் எதுவரை பயின்றுள்ளார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் கேரள மாநில எழுத்தறிவுத்திட்ட இயக்குநர் ஏ.ஜி.ஒலீனா கூறுகையில், 'இந்திரன்ஸ் 8ம் வகுப்பில் பாதியில் பள்ளியிலிருந்து இடைநின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

எங்களது எழுத்தறிவுத்திட்ட பணியாளர்கள் இவர் பள்ளி அளவிலேயே பயின்றுள்ளதை கண்டறிந்து இந்த திட்டத்தில் கல்வி பயில இணைத்துள்ளனர். அவர் சேர்ந்துள்ளதன் மூலம் எழுத்தறிவு திட்டத்தில் மற்றவர்களும் இணைவதற்கு வழிவகுக்கும்' என்றார்.

நடிகர் இந்திரன்ஸ்

மலையாள இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடைய இந்திரன்ஸ் இதுகுறித்து கூறுகையில், 'எனது கல்வியை முழுமையாக நிறைவு செய்ய இயலாமல் போனது குறித்து நான் அடிக்கடி கவலைப்பட்டிருக்கிறேன். பள்ளியிலிருந்து நின்றபோது நான் இழக்கும் விஷயத்தின் மகத்துவம் குறித்து உணரவில்லை. பின்னர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நான் உணர்ந்தேன். குறிப்பாக நடிகரான பிறகு மற்றும் பயணங்களின்போது படிக்காததற்காக மிகவும் வருந்தியிருக்கிறேன். இதனால் நம்பிக்கை குறைவு ஏற்பட்டது. நான் மட்டும் படித்திருப்பேனேயானால், இப்போது இருப்பதை காட்டிலும் மிகவும் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருந்திருப்பேன்'' என்றார்.

கே.சுரேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தனது கதாபாத்திரமான இந்திரன்ஸ் என்ற பெயரில் அறியப்படுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x