நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!


மலையான சினிமா கதாசிரியர் நிஜாம் ராவுத்தர்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்த மலையாள சினிமா கதாசிரியர் திடீரென இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மலையாளட் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மலையாள திரையுலகில் கவனிக்கத்தக்க கதாசிரியர்களில் ஒருவராக வலம் வந்தவர் நிஜாம் ராவுத்தர். ’ஜக்காரியாவின் கர்ப்பிணிகள்’ என்ற திரைப்படத்தில் கதாசிரியராக அறிமுகமானவர் நிஜாம். இந்த படம், கேரளத்தில் நான்கு மாநில அரசின் விருதுகளை வென்றிருந்தது. பாம்பே மிட்டாய், ரேடியோ உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இவர் கதை எழுதியுள்ளார். இவரது சமீபத்திய ’ஒரு பாரத சர்க்கார் உல்பனம்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு பாரத சர்க்கார் உல்பனம் திரைப்பட போஸ்டர்

இதில் பாரத என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு சென்சார் போர்ட் அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், ’ஒரு சர்க்கார் உல்பனம்’ என்ற பெயரில் திரைப்படம் வெளிவர உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை நிஜாம் வெளியிட்டு, விரைவில் இந்த திரைப்படம் வெளிவரும் என அறிவித்திருந்தார். இதனிடையே பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கடமனிட்டா என்ற பகுதியில் வசித்து வந்த நிஜாம், இன்று காலை திடீரென உயிரிழந்தார். 49 வயதான நிஜாம், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த நிஜாமிற்கு சஃபீனா என்ற மனைவியும், ரசூல், அஜ்மீ என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

மலையான சினிமா கதாசிரியர் நிஜாம் ராவுத்தர்

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக நிஜாம் சில காலம் பத்திரிக்கையாளராக பணியாற்றியுள்ளார். அப்போது நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் சம்பவம் நடைபெற்றது. இளம் பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக, நிஜாம் பாராட்டுகளை பெற்றிருந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x