மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!


பொதுவெளியில் நடிகை த்ரிஷாவை தவறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கடந்த சில நாட்களாக திரைத்துறையிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் வலுக்கின்றன.

தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட்டு, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

த்ரிஷா, மன்சூர் அலிகான்.

நடிகர் த்ரிஷா விவகாரம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “தென்னிந்திய நடிகர்கள் சங்கம் எனக்கு கண்டனம் தெரிவித்தது தவறு. அதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். நான் நான்கு மணி நேரம் அவகாசம் தருகிறேன். முறைப்படி என்ன நடந்தது என என்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்க வேண்டும். என்னை பலிகடா ஆக்கி நடிகர் சங்கம் நற்பெயர் எடுக்கப் பார்க்கிறது. மன்சூர் அலிகானிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். நான் எழுந்தால் ஒரு பிரளயமே நடக்கும். நான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளேன். எனக்காக மக்கள் பேசுவார்கள்.

நான் தவறாக பேசியிருந்தால் தானே நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்? சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன செய்வார்கள்? கொலை செய்வது போல காட்டுகிறார்கள் என்றால் உண்மையிலேயே கொலை செய்துவிடுவார்களா? ரசிகர்களுக்கு ரசிப்புத் தன்மை உள்ளது போல, கலைஞர்களுக்கு இருக்கக் கூடாதா? ரேப் சீன் வேண்டும் என்பது நான் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை.

நடிகர் மன்சூர் அலிகான்

என்னுடைய வீட்டிலும் மகளிர் ஆணையம் உள்ளது. தவறாகப் பேசினால், என்னுடைய மகள்களும் தட்டிக் கேட்டிருப்பார்கள். தூக்கிப் போடுவேன் என சொன்னது அந்த கதாபாத்திரமாகதான் சொன்னேன். அவர்களைப் பாராட்டும் விதமாகதான் அப்படி சொன்னேன். நியாயமாகப் பார்த்தால் அவர்கள் எனக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். லோகேஷ் கனகராஜ் ஏதோ விஷயம் தெரியாமல் அப்படி ட்வீட் செய்து விட்டார்” என்றார்.

இந்நிலையில், வைரமுத்து மீ டூ புகாரில் சிக்கியது தொடர்பாக, வைரமுத்துவிடம் மகளிர் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக ஹெச்.ராஜா கூறியுள்ளது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கி இருக்கிறது.

x