HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!


நடிகை ஷாலினி...

நடிகை ஷாலினி என்பதைத் தாண்டி பேபி ஷாலினி என்பது தான் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக ரசிகர்களின் கனவு நாயகியானவர் இப்போது பொறுப்பான குடும்பத் தலைவி. இன்று ‘பேபி’ ஷாலினியின் 43 வது பிறந்த தினம். அத்தனை எளிதில் சினிமாவுக்கு ஆசைப்பட்டு எல்லாம் நாயகியாக நுழையவில்லை ஷாலினி.

ஷாலினி & ஷாமிலி...

மலையாள கிறிஸ்டியன் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷாலினி. இவருக்கு ரிச்சார்ட் என்ற அண்ணனும், ஷாம்லி என்ற தங்கையும் உண்டு. இவரின் தந்தை பாபு, நடிகராக வேண்டும் என்ற ஆசையால் கேரளாவில் இருந்து மெட்ராஸிற்கு வந்தார். ஆனால், அவரின் ஆசை நிராசையாக தனது குழந்தைகள் மூலம் தன் கனவை நிறைவேற்றிக் கொண்டார்.

ஷாலினி மற்றும் ஷாம்லி இருவரும் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெற்றிகரமான குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்தனர். ’பிள்ளை நிலா’, ‘ஓசை’, ‘அஞ்சலி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இருவரும் வளர்ந்த பின்பும், திரையில் கதாநாயகிகளாக ஜொலித்தார்கள்.

விஜய், ஷாலினி

இதில் ஷாமிலி வளர்ந்த பிறகு கதாநாயகியாக நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருக்க, ஷாலினி குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாது கதாநாயகியாவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். மலையாளத்தில் ஒரு சில படங்கள் கதாநாயகியாக நடித்தவர் தமிழில் 1997ம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘காதலுக்கு மரியாதை என்றப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அமைதியான முகம், படபடக்கும் கண்கள் என முதல் படத்திலேயே அசத்தினார்.

இதில் ஷாலினி -விஜய் ஜோடி ரசிகர்களுக்குப் பிடித்ததாக அமைய ‘கண்ணுக்குள் நிலவு’ படத்திலும் அவர்கள் இணைந்து நடித்தனர். ‘கண்ணுக்குள் நிலவு’ படம் வெளியான அதே 1999ஆம் வருடத்திலேயே அஜித்துடன் அவர் ஜோடி போட்ட ‘அமர்க்களம்’ வெளியானது. இதில் இருந்து தான் ஷாலினியின் காதல் அத்தியாயம் தொடங்கியது.

’அமர்க்களம்’ படத்தில்...

படப்பிடிப்புத் தளத்தில் ஷாலினி மீது அஜித் காட்டிய அக்கறை அவருக்கு மிகவும் பிடித்துப் போக இருவருக்கும் இடையில் காதல் மலரத் தொடங்கியது.

‘அமர்க்களம்’ படத்தை இயக்கிய சரண் இவர்கள் இருவரின் காதலுக்கு அப்போது நட்பு ரீதியாக உதவியிருக்கிறார். ஆஃப் ஸ்கிரீனில் மட்டுமல்லாது ‘அமர்க்களம்’ படத்தின் ஆன் ஸ்கிரீனிலும் அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் நடித்த ‘அலைபாயுதே’ படம் இன்றும் காதலர்களுக்கு டிக்‌ஷனரி. குறிப்பாக மாதவன், ஷாலினி டிரெயினில் பேசிக்கொள்ளும் காட்சியைப் பார்த்து புன்னகைக்காதவர்களே இல்லை எனலாம். ’அலைபாயுதே’ தமிழ் சினிமாவில் காதலுக்கு ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியது.

குடும்பத்துடன் ஷாலினி அஜித்...

அதன் பிறகு, ‘பிரியாத வரம் வேண்டும்’ என்ற படத்தில் நடித்தார் ஷாலினி. அதன் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் அஜித்-ஷாலினி திருமணம் கடந்த 2000ஆம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு குழந்தைகள் அனோஷ்கா, ஆத்விக் என குடும்பத்தலைவியாக செட்டில் ஆகிவிட்டார் ஷாலினி. பேட்மிட்டனில் தீவிர ஆர்வம் கொண்டவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக தமிழில் நடித்தது என்னவோ ஐந்து படங்கள்தான். அதிலும் இவை அனைத்தும் காதல் படங்கள் மினி, சக்தி, நித்யா, மோகனா எனத் தனது கதாபாத்திரம் மூலம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

x