பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ஆண்டனிதாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் கதாநாயகனாக நடித்துள்ள ‘போர்’ திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சஞ்சனா நடராஜன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கலையரசனுக்கு ‘லிப்லாக்’ மொத்தம் கொடுத்து, லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் இந்த சஞ்சனா!
அழகாக தமிழ் பேசி, தொடந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் ‘மல்டி ஸ்டாரர்’ படங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் சஞ்சனா நடராஜன். இந்த ஆண்டின் ஹிட் படங்களில் ஒன்றான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் மலைவாழ் பழங்குடிப் பெண்ணாக இவர் நடித்திருந்த ‘பைங்கிளி’ கதாபாத்திரம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் சஞ்சனா நடராஜானுக்கு தற்போது 'போர்' படமும் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் இவர் ஏற்றுள்ள போதை பொருள் பயன்படுத்தும் மருத்துவ மாணவி கதாபாத்திரம் கொஞ்சம் சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது.
இதுபற்றி சஞ்சனாவிடம் கேட்டபோது “ ‘இறுதிச் சுற்று’, ’நோட்டா’, ‘ஜகமே தந்திரம்’, ‘சார்பட்டா பரம்பரை’ என தமிழ்ப் படங்களாக இருந்தாலும் ‘மை ஃபிரெண்ட்’ என்ற மலையாளப் படமாக இருந்தாலும் நான் நடித்த்துள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையது என அப்படங்களின் இயக்குநர்கள் கூறினார்கள்.
’போர்’ பட இயக்குநர் பிஜாய் நம்பியாரிடம் ‘நிஜத்தில் என்னைப் போன்ற மாணவிகள் உண்டா?’ என்றேன். ‘இல்லாமலா உனது கதாபாத்திரத்தை இவ்வளவு நுணுக்கமாக வைத்திருக்கிறேன்’ என்றார்.
இந்தப் படத்தில் ரிஷிகா என்ற மருத்துவ மாணவி ரோல் எனக்கு. இப்படத்தின் கதை, 5 பேர் கொண்ட நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் ஒன்று. அவர்களின் கடந்த காலச் சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்று படம் செல்லும். இது அரசியலோடு சில சமூகப் பிரச்சினைகளையும் பேசி இருக்கிறது.
“படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையுடன் கொண்டு சென்றார். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும். மீண்டும் ஒரு நிஜ கதாபாத்திரத்துடன் உங்கள் பாராட்டைப் பெறுவதற்காக வருவேன். சர்ச்சைகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்கிறார் படா துணிச்சலுடன்.