நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் பூஜை சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்க, அதை விஜய் கண்டுகொள்ளவே இல்லை என்ற விஷயம் நெட்டிசன்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
நடிகர் விஜய் ‘லியோ’ படத்தின் வசூல் மூலம் தான் ஒரு வசூல் சக்ரவர்த்தி என்ற விஷயத்தை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். அந்த வகையில், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் அவர் பிஸி. சமீபத்தில் இந்தப் படத்திற்கான தாய்லாந்து ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
இன்னொரு பக்கம் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையில் பயங்கர பிரச்சினைகள் நடக்கிறது எனவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழரான சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய்க்கு பட இயக்கத்தில் ஆர்வம் அதிகம்.
வெளிநாட்டில் இயக்கம் தொடர்பான படிப்பை முடித்த சஞ்சய் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா இவருக்கு படம் இயக்க வாய்ப்புக் கொடுத்தது. அதன் அறிவிப்பில் கூட விஜய் மகன் சஞ்சய் என்ற விஷயத்தை அவர் எங்கும் பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், லைகா நிறுவனத்திடம் பேசி சஞ்சய்க்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே சங்கீதாதான் என்ற விஷயமும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சஞ்சய் இயக்க இருக்கும் படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டிருக்கிறது.
எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கும் இந்தப் படப்பூஜையில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை என்ற விஷயம் அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சங்கீதாவுடனான பிரச்சினையால் அவர் சஞ்சயை ஒதுக்குகிறாரா அல்லது தன்னுடைய பெயரை பயன்படுத்தாமல் சஞ்சய் சினிமாவில் முன்னேற வேண்டும் என அவர் நினைக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற விஷயம் இன்னும் வெளிவராத நிலையில் விரைவில் அதுகுறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.