ஜப்பானில் மகன் திருமணம்: குடும்பத்தினரோடு கப்பலில் புறப்பட்டார் நடிகர் நெப்போலியன்!


நடிகர் நெப்போலியன் தன் மூத்த மகன் திருமணத்திற்காக ஜப்பான் கிளம்பியுள்ளார்.

நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் எனப் பன்முகம் கொண்டவர் நெப்போலியன். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன், கடந்த மாதத்தில் தன் மூத்த மகன் தனுஷின் நிச்சயதார்த்த விழாவினை நடத்தி முடித்தார். வரும் நவம்பர் மாதத்தில் மகன் தனுஷின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தார்.

நெப்போலியன் மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வீடியோ கால் மூலமாகவே திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

நிச்சயதார்த்ததின் பின்னர் தன் மகனின் திருமணம் ஜப்பானில் நடைபெறுவதாக அறிவித்தார். நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கப்பலில் பயணம் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நடிகர் நெப்போலியன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பு நண்பர்களே தமிழ் சொந்தங்களே செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் Nashville- லில் இருந்து எனது குடும்பத்தோடு ஜப்பானுக்கு பயணம் தொடங்கிய போது நண்பர்கள் எல்லோரும் வந்திருந்து சிறப்பாக வாழ்த்துக்களை அளித்து எங்களை பாசத்தோடு வழியனுப்பி வைத்த மகிழ்வான தருணம். எங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

x