அனகாபுத்தூரில் அனுமதியின்றி வைத்த நடிகர் விஜய்யின் 20 அடி கட் அவுட் அகற்றம்


பிரதிநிதித்துவப் படம்

அனகாபுத்தூர்: நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தை வரவேற்பதற்காக 20 அடி கட் அவுட்டை காவல்துறை அனுமதி இல்லாமல் வைத்ததால் அவை அகற்றப்பட்டது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) திரைப்படம், நாளை மறுநாள் (செப். 5) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'கோட் 'படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் உள்ள வெல்கோ திரையரங்கின் வெளியே சாலையில் 20 அடி உயரத்திற்கு நடிகர் விஜய்யின் கட் அவுட் காவல்துறை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதை அறிந்த போலீஸார் அதனை அகற்ற ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ரசிகர்களுக்கு போலீஸாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கட் ஆவுட் அகற்றப்பட்டது.

கோட் திரைப்படம் திரைக்கு வரும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்றும் விஜய் அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ரசிகர்கள் அதனை ஏற்காமல் கட் அவுட் பேனர்களை வைத்து வருகின்றனர்.

x