உலக புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கி கடந்த 21ம் தேதி வெளியான திரைப்படம் ஓப்பன்ஹெய்மர். இத்திரைப்படம், அமெரிக்காவின் அணுகுண்டு தந்தை என்றழைக்கப்படும் ஓப்பன்ஹெய்மர் என்ற அறிவியல் ஆராய்ச்சியாளரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை வாரி குவித்துள்ள இத்திரைப்படம் சர்ச்சையையும் சேர்த்து கிளப்பியுள்ளது.
ஓப்பன்ஹெய்மர் கீதையை படித்ததாகவும், அவர் பல இடங்களில் அதனை குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனை பிரதிபலிக்கும் விதமாக கீதையின் வரிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. அதில் ’நானே மரணம், உலகை அழிப்புவனும் நானே’ என்ற கீதை வரிகள் படுக்கையறை காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் நோக்குடன் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து சர்ச்சை ட்வீட் ஒன்றை இயக்குனர் ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்கரான ஓப்பன்ஹெய்மர் கூட கீதையை படித்துள்ளார். ஆனால், 0.0000001% இந்தியர்கள் கூட கீதையை படித்திருப்பார்களா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.