நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா' குறித்தான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் 80களில் நகைச்சுவை நடிகராக மக்களை மகிழ்வித்தவர் நடிகர் கவுண்டமணி. குறிப்பாக கவுண்டமணி- செந்தில் இணை ரசிகர்கள் மத்தியில் இன்றளவிலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் களம் இறங்குகிறார் கவுண்டமணி.
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.
'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.