தவெக முதல் மாநாடு: விவரங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!


நடிகர் விஜயின் தவெக முதல் மாநாடு செப்டம்பர் 23ம் விக்கிரவாண்டியில் அனுமதி கேட்டிருந்த நிலையில், மாநாட்டில் எத்தனைப் பேர் பங்கேற்பார்கள்? என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனா போன்ற விவரங்களைக் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு இம்மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடத்துவதற்காக அனுமதி கேட்டிருந்தனர். அரசியல் கட்சி தொடங்கிய இந்த ஆறு மாத கால அளவில் விஜய் முன்னெடுக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி இது என்பதால் கடந்த வாரத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்தார் விஜய்.

மாநாடு நடத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கேட்டு மனு அளித்திருந்த நிலையில், தற்போது மாநாடு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை தவெகவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அதில், மாநாடு நடைபெறும் நேரம், எத்தனை பேர் தோராயமாக மாநாட்டில் பங்கேற்பார்கள், மாநாட்டில் எத்தனை வாகனங்கள் வரையில் எதிர்பார்க்கப்படுகிறது, வாகனங்களை எங்கே நிறுத்த ஏற்பாடு? மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் என்ன? குழந்தைகள்- பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? மாநாடு முடிந்த பின்னர் மைதானத்தில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்வது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நோட்டீஸூக்கு அடுத்த ஐந்து நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தவெக-வுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x