“திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது நடிகர் சங்கத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?” என்று நடிகர் மோகன்லால் ஆவேசமாக கூறினார்.
மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்தார். செயற்குழுவும் கலைக்கப்பட்டது. நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் நடிகர் சங்கம் சரியாகச் செயல்படவில்லை என்று பலர் குற்றம் சாட்டினர்.
நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்துவரும் நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த கேரள கிரிக்கெட் லீக் அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால் கூறியது: “நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. என் மனைவிக்கு அறுவை சிகிச்சை என்பதால் உடன் இருக்க வேண்டியிருந்தது. நான் இயக்கியுள்ள ‘பரோஸ்’ படத்தின் இறுதிக்கட்ட வேலையில் இருந்ததால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
மலையாள நடிகர் சங்கம் என்பது தொழிற்சங்கமல்ல. அது குடும்பம். திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது நடிகர் சங்கத்தை மட்டும் இந்த விவகாரத்தில் எப்படி குறை சொல்ல முடியும்? நடிகர் சங்கம் பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்.
பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்கள் கடமையைச் செய்கின்றன. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் ஹேமா கமிட்டியிடம் இரு முறை என் வாக்கு மூலத்தைக் கொடுத்துள்ளேன்.
குற்றவாளிகள் கண்டிப்பாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்போம். இந்த விவகாரத்தால் மலையாள சினிமா பாதிக்கக் கூடாது. பாலியல் குற்றச்சாட்டில் இருந்து மலையாள திரைத் துறையைக் காக்க வேண்டும்” என்ற மோகன்லால், சில கேள்விகளைத் தவிர்த்தார்.