அரசியல் மாநாடு... விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?


நடிகர் விஜய்

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த முடிவெடுத்திருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் முடிவெடுத்தது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் என நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அறிவித்தார். அதன் பிறகு அவரது அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவரது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அதன்படி கட்சி அறிவித்து ஒரு மாதத்தைக் கடக்கும் நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் மதுரையில் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார் விஜய். முதல் மாநாட்டை நடத்த அவர் மதுரையைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆன்மிக நகரமான மதுரையை சிவபெருமான் திருவிளையாடல் நடத்திய இடமாக ஆன்மிக அன்பர்களால் நம்பப்படுகிறது. தமிழ் வளர்த்த மண் என்ற பெருமையும் மதுரைக்கு உண்டு.

நடிகர் விஜய்

இத்தனை சிறப்பு வாய்ந்த மதுரையையே தங்களின் அரசியல் அரங்கேற்றத்துக்கு தேர்வு செய்வதை அரசியல்வாதிகளும் சென்டிமென்டாகவே வைத்திருக்கிறார்கள்.

1950-ல் எம்ஜிஆருக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது மதுரையில்தான். தனது அரசியல் கொள்கையாக அண்ணாவின் கருத்துகளை எம்ஜிஆர் பிரகடனம் செய்ததும் இதே மதுரையில்தான். 1973-ல் மதுரை மாவட்டத் துக்குள் இருந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் தான் அதிமுகவின் முதல் வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார் எம்ஜிஆர். இந்தத் தேர்தலில் தான் இரட்டை இலை உதயமானது. அதிமுக தனது முதல் வெற்றியை பதிவு செய்ததும் இந்தத் தேர்தலில் தான்.

அதேபோல, நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆசையைத் தூண்டி விட்டதும் இதே மதுரைதான். 1981-ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வரவேற்புதான் அவரது அரசியல் பயணத்துக்கான ஆரம்பம். இதேபோல், 1980 ஜூலை 20-ல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தான் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி உதயமானது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிதாக அரசியல் இயக்கம் கண்ட நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியதும் மதுரை திருப்பரங்குன்றத்தில் தான். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதும் இதே மதுரையில்தான். இவ்வளவு ஏன்... கட்சிக்குள் இருந்த சச்சரவுகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்து கட்சின் பொதுச்செயலாளராக அங்கீகரிக் கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தனது முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியதும் மதுரையில் தான்.

ஆக, ஆன்மிகத்தில் மட்டுமல்லாது அரசியல் நடவடிக்கைகளிலும் மதுரையானது முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இந்த ஃப்ளாஷ் பேக்கை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் விஜயும் தனது முதல் அரசியல் மாநாட்டுக்கான களமாக மதுரையைத் தேர்வு செய்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

x