தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா இன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நோட்டீஸைப் பெற்ற அடுத்த 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதோடு, நஷ்ட ஈடாக தொகையையும் கேட்டிருக்கிறார் நடிகர் த்ரிஷா. இதில், நஷ்ட ஈடு தொகை எவ்வளவு என்பதை மறைத்து வெளியிட்டிருப்பது தான் புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த வழக்கறிஞர் நோட்டீஸிலும், பத்திரிக்கைகளுக்கு அவர் சார்பாக அளிக்கப்பட்டிருந்ததிலும் நஷ்ட ஈடு தொகை மறைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜூ, நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து, “கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து போவர்களைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது” என நடிகை த்ரிஷா தனது வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், இதனை சட்டரீதியாக தான் சந்திப்பேன் எனவும் கூறினார். சொல்லியபடியே, இன்று ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் த்ரிஷா.
அதில், 'இந்த நோட்டீஸை பெற்ற 24 மணி நேரத்திற்குள் என்னிடம் ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதுமட்டுமல்லாது தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் விளம்பரமும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மானநஷ்ட வழக்குத் தொடருவேன். சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் என்னை பற்றி பேசிய கருத்துகள் அடங்கிய அனைத்து பதிவுகளையும் ராஜு அவருடைய சொந்த செலவில் நீக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் மூலம் தனக்கு மன உளைச்சலையும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியத்தியதற்காகவும் ராஜூ தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனச் சொல்லி த்ரிஷா ஒரு தொகையையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்தத் தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாகக் காட்டாமல், மறைத்தே இந்த நோட்டீஸை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
நஷ்ட ஈடு தொகை, கோடிகளிலா, லட்சங்களிலா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இன்னும் சிலர், த்ரிஷா நஷ்ட ஈடு வேண்டாம் என்று மறுத்ததையே அப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்றும் சொல்கின்றனர். இது குறித்து த்ரிஷாவின் மக்கள் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டதில், “நடிகை த்ரிஷா நஷ்ட ஈடு கேட்டுள்ளார் எனவும், அது எவ்வளவு தொகை என்பது பொதுவெளியில் தெரியவேண்டாம் என்பதற்காகவே அவர் அப்படி மறைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
விவசாயிகள் திடீர் முடிவு... 'டெல்லி சலோ' போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம்?... திமுக நாளை கலந்தாலோசனை!
குட்நியூஸ்... பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு நாளை முதல் ஆதார் பதிவு!
கைது நடவடிக்கைக்கு பயந்து, இரவு முழுவதும் கட்சி அலுவலகத்தில் தங்கிய காங்கிரஸ் தலைவர்!
50 லட்சம் பக்தர்கள் தரிசனம்... அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்!