இந்தத் தேர்தலில் போட்டியில்லை சட்டமன்றம் தான் இலக்கு என்றாலும் பொறுப்பாளர்கள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை என நடிகர் விஜய் தனது ஹை ஸ்பீடு அரசியலை இப்போதே தொடங்கி இருக்கிறார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போதே அவர் 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனத் தெரிவித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார்.
இடைப்பட்ட இந்த இரண்டு வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் தனது ஹைஸ்பீடு அரசியலை இப்போதே தொடங்கிவிட்டார் விஜய். அவரது அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் உற்று நோக்கப்படுகிறது. சமீபத்தில் பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப்பட்டது.
2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முடிவு ஹைலைட்டாக அமைந்தது. தற்போது தமிழகத்தை நிர்வாக வசதிக்காக கட்சி ரீதியில் 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த பத்து நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் நியமனத்திற்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழக்கத்தின் அடுத்தடுத்த பரபர செயல்பாடுகள் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளி இருப்பதுடன் பிற அரசியல் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.