ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் முதன்முறையாக மெளனம் கலைத்திருக்கிறார்.
கேரள திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கேரள அரசு அமைத்த ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. திரைத்துறையில் பெண்களுக்கு நேரும் பாலியல் அத்துமீறல்களை இந்த அறிக்கை தோலுரித்துக் காட்டியது. பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். பல நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ‘அம்மா’ அமைப்பின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். இந்த முடிவு கோழைத்தனமானது என நடிகை பார்வதி விமர்சித்தார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இப்படி ராஜினாமா செய்து விட்டு போவது கோழைத்தனம் என எதிர்ப்பு குரல்களும் ஒலிக்க துவங்கியிருக்கும் நிலையில், முதல் முறையாக ஹேமா கமிட்டி பற்றி மோகன்லால் மெளனம் கலைத்திருக்கிறார்.
இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால், “மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும் போது எப்படி அம்மா சங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியும்? ‘அம்மா’ மட்டுமே எப்படி எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்கே தான் இருக்கிறேன். ஹேமா கமிட்டியின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ’அம்மா’ மீது அவதூறு பரப்ப வேண்டாம். இந்த புகாரால் மலையாள சினிமா பாதிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன். இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றமும், காவல்துறையும் தங்கள் கடமையைச் செய்கின்றன. விரைவில் உண்மை வெளியே வரும். வயநாடு போன்ற பேரிடர் சமயத்தில் ’அம்மா’ பல உதவிகளைச் செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.