திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக எழுந்த புகார் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
இக்குழு தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு சமர்ப்பித்தது. அதில் உள்ள தகவல்கள் சில நாட்களுக்கு முன்புவெளியாகின. அதில், மலையாள நடிகைகள், படவாய்ப்புக்காக பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என்று கூறப்பட்டிருந்தது. பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக சில நடிகைகள் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
நடிகர் சங்கம் கலைப்பு: இதையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்தார். சங்கம் தற்காலிகமாக கலைக்கப்படுவதாகவும் அறிவித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த கேரள அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இக்குழு நடிகைகளிடம் விசாரணை நடத்தி வருகிறது.
சித்திக் மீது துணை நடிகை ஒருவரும் முகேஷ், ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியம்பிள்ளை ராஜூ உட்பட 6 பேர் மீது நடிகை மினு முனீரும் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ஜெயசூர்யா மீது மற்றொரு நடிகை பாலியல் புகார்தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளதால் தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர் இன்னும் சில நாட்கள் அங்கேயே இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கதை விவாதத்துக்காக அழைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, இயக்குநர் வி.கே.பிரகாஷ் மீது இளம் எழுத்தாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்