கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஜிகர்தண்டா2'. தீபாவளியையொட்டி இன்று வெளியாகும் இந்த படத்திற்கு நடிகர் தனுஷ் தன்னுடைய முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகமாக ‘ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’ இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இதில் ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் இன்று வெளியாகிறது.
இந்த படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ், படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ''ஜிகர்தண்டா 2' படத்தை பார்த்துவிட்டேன். கார்த்திக் சுப்பாராஜின் சிறப்பான படைப்பு. எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். ராகவா லாரன்ஸின் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த தீபாவளி ரிலீஸில் ‘ஜிகர்தண்டா 2’ ஹிட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய முத்திரையை பதித்திருப்பதாக பிரபலங்கள் கூறி வருகின்றனர்.