பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான யோ யோ ஹனி சிங் மற்றும் அவரது மனைவி ஷாலினி தல்வார் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான யோ யோ ஹனி சிங் என்பவருக்கும் ஷாலினி தல்வார் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஹனி சிங் தன்னை கொடுமைப்படுத்துவதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ஷாலினி.
அந்த மனுவில், ஹனி சிங் தன்னை உடல் அளவிலும், மனதளவிலும் பலமுறை கொடுமைப்படுத்தியதாகவும், ஹனி சிங் தன் பாடல்கள், நிகழ்ச்சிகள், ராயல்டிகள் மூலம் மாதம் ரூ. 4 கோடி சம்பாதித்ததாகவும், அந்த நேரத்தில் தான் அவர் மது, போதைப்பொருளுக்கு அடிமையானார் என்றும் தன்னுடைய மனுவில் ஷாலினி தல்வார் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னைக் கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் குற்றச்சாட்டை மறுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் யோ யோ ஹனி சிங். மேலும், தனது குடும்பத்திற்கு எதிராக தன்னுடைய மனைவி ஷாலினி தல்வார் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளால் தான் மிகவும் வேதனைப்படுவதாகவும், அவருடைய இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் கடுமையாக வெறுக்கத்தக்கவை என்றும் அப்போது விளக்கம் கொடுத்திருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இவர்களது வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் செவ்வாய்கிழமையான நேற்று டெல்லி நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியது. டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி பரம்ஜித் சிங், பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்களுக்கு விவாகரத்து வழங்கினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஹனி சிங் ஷாலினிக்கு ஜீவனாம்சமாக ஒரு கோடி ரூபாயைக் கொடுத்துள்ளார். இனிமேல் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் ஹனி சிங். பள்ளி நண்பர்களான ஹனி சிங்-ஷாலினி பத்து ஆண்டுகளாக காதலித்து 2011-ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி தற்போது திருமண வாழ்வில் இருந்து பிரிந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!