நடிகை அளித்த பாலியல் புகார்: நடிகர் சித்திக் மீது வழக்குப் பதிவு


நடிகை அளித்த பாலியல் புகாரில், நடிகர் சித்திக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதிஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிக்கை வெளியான பின் பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது சில நடிகைகள், புகார்களைக் கூறி வருகின்றனர்.

மலையாள நடிகர் சங்க பொது செயலாளராக இருந்த சித்திக் மீது, ரேவதி சம்பத் என்ற துணை நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். நடிகை மினு முனீர், நடிகரும் கொல்லம் எம்.எல்.ஏ.வுமான முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். பாபுராஜ், ரியாஸ் கான் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 17 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலையாள நடிகர் சங்கம் நேற்று முன் தினம் கலைக்கப்பட்டது.

வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் ரஞ்சித்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,ரேவதி சம்பத் அளித்த புகாரில், திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸார் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் விடுதியில், நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ரேவதி சம்பத் புகார் கூறியிருந்தார்.

நடிகர் முகேஷ் நீக்கம்: இதற்கிடையே திரைப்படக் கொள்கையை உருவாக்கும் கேரள அரசின் பொறுப்புக் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கப்பட்டுள்ளார். கேரள அரசு சார்பில்திரைப்படக் கொள்கையை உருவாக்கு வதற்கு நடிகர் முகேஷ், மஞ்சு வாரியர், பி.உன்னி கிருஷ்ணன், பத்மபிரியா, ராஜீவ் ரவி, நிகிலா விமல், சந்தோஷ் குருவிலா, சி.அஜோய் உட்பட 10 பேர் கொண்ட குழுவை, கேரள அரசு கடந்த வருடம் அமைத்தது. நடிகர் முகேஷ் மீது, மினு முனீர் பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

x