ஹேமா கமிட்டி குறித்து நடிகை குஷ்பு தனது கருத்தை நீண்ட ட்விட்டாக வெளியிட்டுள்ளார்.
மலையாளத் திரையுலகில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் என்றும் ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை கடந்த வாரத்தில் வெளியிட்டது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 16 செயற்குழு உறுப்பினர்களும் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த ‘மீ டூ’ விஷயம் நிச்சயம் திரைத்துறைக்கு இழுக்கு. தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தைரியமாக முன்வந்து வெளியே சொன்ன நடிகைகளுக்கு வாழ்த்துகள். ’ஹேமா கமிட்டி’ இது போன்ற இன்னும் பல கொடுமைகளை வெளிப்படுத்த வேண்டும். பாலியல் ரீதியாக உடன்பட வேண்டும், துன்புறுத்தலுக்கு உள்ளாகுதல் போன்ற விஷயங்கள் எல்லாத் துறைகளிலும் உள்ளது. ஆனால், இதில் பெண்கள் மட்டுமே ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
இந்தப் பிரச்சினை தொடர்பாக எனது 24 வயது மற்றும் 21 வயது மகள்களுடன் நீண்ட நேரம் உரையாடினேன். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பை அவர்கள் புரிந்து கொண்டு, ஆதரவு கொடுத்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இன்று பேசுவதா நாளை பேசுவதா என்பது முக்கியமல்ல, பேசுங்கள். உடனடியாக பேசுவது நீங்கள் அதில் இருந்து கொஞ்சமேனும் விடுபடவும் விசாரணையை விரைவுபடுத்தவும் உதவும்.
பாதிக்கப்பட்டவர்களை உணர்வு ரீதியாக உடைப்பதும் அவர்களே குற்றம் செய்தவர்கள் போல கேள்வி எழுப்புவதும் நடக்கும். அதற்கெல்லாம் பயப்படாதீர்கள். ஒரு பெண்ணாகவும், தாயாகவும் எப்போதும் நான் உடனிருப்பேன். என் தந்தை எனக்கு செய்த பாலியல் துஷ்பிரயோகம் பற்றி ஏன் முன்பே சொல்லவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். நான் முன்பே பேசியிருக்க வேண்டும் தான். என் கரியரை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இதை இவ்வளவு நாட்கள் சொல்லாமல் இல்லை. நான் விழும்போது என்னைத் தாங்கிப் பிடிக்கும் கைகளுக்காக தான் காத்திருந்தேன். பெண்களுக்கு ஆண்களும் துணையாக நிற்க வேண்டும். இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாலியல் சுரண்டல் இத்துடன் நிறுத்தப்படட்டும். பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையில் உங்களுக்கு எப்போதும் ஒரு தேர்வு இருக்கும். நீங்கள் ’நோ’ என்றால் கண்டிப்பாக ’நோ’தான். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒருபோதும் சரிசெய்யவோ அல்லது சமரசம் செய்யவோ வேண்டாம். இதை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நான் நிற்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.