நடிகர் மோகன்லால் உட்பட மலையாள நடிகர் சங்கத்தின் 16 உறுப்பினர்களும் திடீர் ராஜினாமா!


ஹேமா கமிட்டி அறிக்கையின் எதிரொலியாக நடிகர் மோகன்லால் உட்பட மலையாள திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’ சங்கத்தின் 16 உறுப்பினர்களும் தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கேரள திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் நடிகைகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் பல முன்னணி நடிகர்களும் உள்ளனர் என்றும் ஹேமா கமிட்டி கூறியது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்போம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

கடந்த சில நாட்களாக நடிகைகள் பலர் வெளிப்படையாக முன்வந்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் இதில் சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்களின் பெயர்களையும் சொன்னது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார்கள் பற்றி மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்கள் மெளனம் காப்பது ஏன் என ரேவதி உள்ளிட்ட பல நடிகைகளும் கேள்வி எழுப்பினர். தொடரும் நெருக்கடிகளால் மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ இன்று ஆன்லைன் மூலமாக அவசர ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் ‘அம்மா’வின் தலைவர் மோகன்லால் உட்பட 16 செயற்குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x