நடிகர்கள் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் சுரேஷ் கோபி கொந்தளிப்பு!


”பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். நீங்கள் ஏன் இதுபற்றி கேட்கிறீர்கள்?” என நடிகர் சுரேஷ் கோபி பத்திரிக்கையாளர்களிடம் கொந்தளித்திருக்கிறார்.

ஹேமா கமிட்டி அறிக்கை கேரளாவில் பல சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. கேரளத் திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. இதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் எனவும் ஹேமா அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாகவே பல நடிகைகள் வெளிப்படையாக முன் வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை சொன்னதோடு பல நடிகர்கள் மீதும் இயக்குநர்கள் மீதும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்து நடிகரும், ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் பத்திரிக்கையாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். ”பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். நீங்கள் ஏன் இதுபற்றி கேட்கிறீர்கள்? திரையுலகை நீங்கள் நிலை தடுமாற வைக்கிறீர்கள். ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது. ஊடகங்கள் இதில் நன்றாக பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் சண்டை கிளப்பிவிட்டு அதில் ரத்தம் குடிப்பவர்கள் போல காத்திருக்கக் கூடாது. நடிகர்கள் பற்றி மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் ” என்று கோபமாகப் பேசியிருக்கிறார்.

x