நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்!


நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு சென்னையில் காலமானார். இது திரையுலகினர் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிராங்க் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் அதன் பின்னர் ’நட்பே துணை’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘ஆடை’ உள்ளிட்டப் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் கோமாளியாக களமிறங்கி அதகளப்படுத்தினார்.

திரைப்படங்களில் அடுத்தடுத்து கவனிக்கத்தக்க வகையில் வாய்ப்புகள் கிடைத்து ரசிகர்களிடையே பிரபலமடைந்து வரும் நிலையில், திடீரென ஆள் இருக்குமிடம் எங்கே எனத் தேடும் அளவுக்கு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் பிஜிலி ரமேஷ்.

குடிப்பழக்கம் காரணமாக தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் யாரும் குடி பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்றும் உருக்கமாக பேசிய அவரது வீடியோ வைரலானது.

சிகிச்சைக்காக பணம் இல்லாமல் தவித்து வருவதாக பிஜிலி ரமேஷின் உடல்நிலைக் குறித்து அவரது மனைவி பேட்டி கொடுத்திருந்தார். அதில், “குடிப்பழக்கத்தால் எனது கணவருக்கு கல்லீரல் பாதிப்படைந்து விட்டது. கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், அதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 60 லட்சம் வரை செலவாகும் என்று சொன்னார்கள். ஆனால், அவ்வளவு வசதி இல்லாததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மகனை நான்தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு முடிந்தளவு பண உதவி செய்யுங்கள்” என உருக்கமாகப் பேசியிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு 9.45 மணியளவில் பிஜிலி ரமேஷ் காலமானார். சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகினரும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

x