இயக்குநர் வீட்டில் திருடுபோன பதக்கங்கள்... மன்னிப்புக் கடிதத்துடன் திருப்பி அனுப்பிய திருடர்கள்!


இயக்குநர் மணிகண்டன்

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் கும்பல் ஒன்று நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. அப்போது, தேசிய விருதுபெற்றபோது மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கங்களையும் அள்ளிச் சென்றது அந்தக் கும்பல். இந்த நிலையில், தற்போது மன்னிப்புக் கடிதத்துடன் சேர்த்து அந்தப் பதக்கங்களை மட்டும் மணிகண்டன் வீட்டில் தொங்கவிட்டுச் சென்றுள்ளது அந்தத் திருட்டுக் கும்பல்.

மர்மக் கும்பலின் மன்னிப்புக் கடிதம்...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். 'காக்கா முட்டை', 'கடைசி விவசாயி' உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டன் குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.

மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டை அவரது உறவினர்கள் பராமரித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி மர்ம நபர்கள் உசிலம்பட்டியில் உள்ள அவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். கூடவே, 'கடைசி விவசாயி' படத்துக்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களையும் திருடிச் சென்றது அந்தக் கும்பல்.

கடிதத்துடன் தேசிய விருது...

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உசிலம்பட்டி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மணிகண்டன் வீட்டு வாசலில் பாலித்தீன், ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என்ற மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளை கும்பல் பாலித்தீன் பையில் வைத்து தொங்க விட்டுச் சென்றுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x