நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களின் வாரிசுகள் அடுத்து களமிறங்குவது ஒரு பக்கம் என்றால், பிரபலங்களின் உடன்பிறப்புகளும் சினிமாவுக்குள் வருவதும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜயின் தம்பி விக்ராந்த், சூர்யா தம்பி கார்த்திக், சாய்பல்லவி தங்கை மீரா, அதர்வா முரளி தம்பி ஆகாஷ் என இவர்களும் தங்களது உடன் பிறப்புகள் பிரபலமானதை அடுத்து சினிமா களத்தில் இறங்கியவர்கள்தான்.
இந்த வரிசையில் இப்போது நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவும் இணைந்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படம் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் விஷ்ணு விஷாலில் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தன் மீது இந்த கவனம் இருக்கும்போதே அருண்ராஜா காமராஜாவுடன் தான் இணையும் அடுத்தப் படம் குறித்து அறிவித்தார் விஷ்ணு விஷால். இப்போது அவரது தம்பி ருத்ரன் கதாநாயகனாக அறிமுகாமும் திரைப்படம் ’ஓஹோ எந்தன் பேபி’. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப் படத்தினை விஷ்ணு விஷாலின் விவிஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
விஷ்ணு விஷாலை சினிமாவில் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தினை கிளாப் அடித்துத் தொடங்கி வைத்துள்ளார். அண்ணனைப் போலவே சினிமாவில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...