படம் வெளிவந்தால் கலவரம் உருவாகும்: 'மாமன்னன்' படத்துக்கு தடை கோரி டிஜிபிக்கு மனு


உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் விரைவில் வெளியாகயுள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. மணிகண்டன் என்பவர் காவல்துறை தலைவர், தென் மண்டல காவல்துறை தலைவர், தணிக்கைத் துறையினர் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், 'தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ் என்பவர் தேவர் ஜாதியினருக்கும் தேவேந்திர குல வேளாளர் ஜாதியினருக்கும் இடையே கலவரத்தை தூண்டுவது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து எடுத்து வருகிறார். ஏற்கெனவே 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' என்ற படங்களில் இரு சமுதாயத்தினருக்கு இடையே நடந்த கலவரங்களை மையப்படுத்தியே திரைப்படம் எடுத்திருந்தார்.

அந்த கலவரங்கள் குறித்து இக்கால சமுதாயத்தினருக்கு தெரியாத நிலையில் அதைப்பற்றி நினைவுப்படுத்தி எப்போதும் இரண்டு சமுதாயத்துக்கும் சண்டை என்பது போல சித்தரித்துள்ளார். குறிப்பாக 'கர்ணன்' திரைப்படம் கொடியங்குளம் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது அவர் எடுத்திருக்கும் 'மாமன்னன்' திரைப்படம் 'தேவர் மகன்' படத்தைப் பார்த்து எடுக்கப்பட்டது என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்த திரைப்படம் ஒரே ஜாதியினருக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு, அடிதடி, கொலை ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும். ஆனால் மாரி செல்வராஜ் இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட கதையை மோதலை வைத்து எடுத்திருப்பதால் வரலாறு திணிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.

'மாமன்னன்' என்ற பெயர் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த நெல்கட்டும் சேவலைச் சேர்ந்த மன்னன் பூலித் தேவனுக்கு உரியதாகும். ஆனால் இவர் திட்டமிட்டு அந்த பெயர் பூலித்தேவனுக்கு இருப்பதை மறைக்கும் விதமாக இப்படி ஒரு பெயரை வைத்து படம் எடுக்கிறார். இனிவரும் காலங்களில் 'மாமன்னன்' என்று தேடினால் இவரது திரைப்படம் பற்றிய தகவல்களே கிடைக்கும். 'மாமன்னர்' பூலித்தேவரின் வரலாறு மறைக்கப்பட்டு விடும்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் இரு வேறு சமூகத்தினர் வெட்டிக்கொண்டு சாக வேண்டும் என்று நினைத்து தேவர் சமுதாயத்தினர், தேவேந்திர குல வேளாளர்களை தாக்குவது போன்றும், அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போன்றும் படங்களில் சித்தரிக்கிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் திட்டமிட்டு தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்தை உருவாக்கினால் தான் அரசியல் செய்ய முடியும் என்கிற நினைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். இந்த படம் வெளியானால் முந்தைய காலம் போல் தென் மாவட்டங்களில் இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே கலவரம் ஏற்படும்.

எனவே இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். அதுவரையிலும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும், மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மணிகண்டன் வழக்கும் தொடர்ந்துள்ளார். அந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

x