சென்னை: சினிமா போல அரசியல் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, விஜயகாந்தின் நினைவிடத்தில் நாளை சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, தேமுதிக அலுவலகத்தில் ’கலாம் உலக சாதனை’ என்ற பெயரில் 71 தொண்டர்களுக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகம் டாட்டூ போடும் நிகழ்வை பிரேமலதா தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். விஜயின் தவெக கொடி சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது பற்றியும், நேரில் நடந்த சந்திப்பு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ அரசியல் என்பது சினிமா போல கிடையாது. ஒவ்வொரு அடியும் பார்த்துதான் வைக்க வேண்டும். இப்போதுதான் விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். பல சர்ச்சைகளும் சவால்களும் பார்க்க வேண்டியிருக்கு. விஜய் புத்திசாலி, அமைதியானவர். நிச்சயம் இதை எல்லாம் தைரியமாக எதிர்கொள்வார்.
அன்று வீட்டிற்கு வந்து கேப்டனுக்கு மரியாதை செலுத்திவிட்டு எங்களுடன் உரையாடினார். விஜய் எங்கள் வீட்டிற்கு வருவது புதிதல்ல. ‘GOAT' படத்தில் கேப்டனுடைய காட்சிகள் சிறப்பாக பிரம்மாண்டமாக வந்திருக்கிறது என்றார். எங்களுக்கு சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். சின்ன வயதில் இருந்தே அவரைப் பார்த்து வருகிறோம். அவர் எங்கள் வீட்டுப் பிள்ளை போலதான். விஜயபிரபாகரனிடமும், சண்முகபாண்டியனிடமும் ஜாலியாக பேசினார்.
’நீங்கள்தான் என் ரோல் மாடல்’ என சண்முகப் பாண்டியன் விஜயிடம் கூறினார். ’விஜய பிரபாகரன் அரசியலில் எனக்கு சீனியர். உன்னுடைய பேச்சு எல்லாம் சூப்பர்’ என விஜய் பாராட்டினார். மற்றபடி 2026 கூட்டணி பற்றி எல்லாம் பேசவில்லை” என்றார்.