நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நீர்நிலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடங்களை அகற்ற ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளை சுற்றி ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கட்டிடங்களை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்ததில் 56 குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதில் மாதப்பூர், தம்மிடிகுண்டா குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகர்ஜூனா பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்றைக் கட்டியிருக்கிறார். மொத்தம் உள்ள 29.24 ஏக்கரில் சுமார் 3.5 ஏக்கருக்கு சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று காலை ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இந்த கட்டிடத்தின் 35 சதவீத கட்டுமானத்தை பெரிய ராட்சத இயந்திரம் வைத்து இடித்துத் தள்ளியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் பற்றி நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். ’இந்த நிலம் என் சொந்த இடம். ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிப்பு கிடையாது. இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு என்று குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியிருந்தால் நாட்டின் குடிமகனாக நானே இடித்திருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.