’லியோ’ படவெற்றி விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படம் குறித்தும், படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய் கொடுத்த பரிசு பற்றியும் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது.
’லியோ’ பட வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசுகையில், “’லியோ’ படம் மூலம் எனக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி. இந்தப் படத்தின் பூஜைக்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக எந்த நிகழ்ச்சியும் பெரிதாக நடக்கவில்லை. இந்த மேடை இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. இசை வெளியீட்டு விழா நடக்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான்.
இயக்குநர் வெற்றிமாறனை எனது 2, 3 படங்களில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். அவரை நடிகராக மாற்ற வேண்டும் என ஆசை. விரைவில் அது நடக்கும் என நினைக்கிறேன். ’லியோ’ படத்தின் இறுதி வெர்ஷனை பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார். மிகவும் சந்தோஷமாக இருந்தது” என்றவரிடம் படத்திற்காக என்ன பரிசு எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஹெலிகாப்டருக்கு பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். காத்திருக்கிறேன்” என பேசி நிகழ்வை கலகலப்பாக்கினார்.